Skip to main content

ஹாட்ரிக் அடித்த பிரபாகரன்... பாலமேடு  ஜல்லிக்கட்டு நிறைவு! 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

Prabhakaran scores a hat trick ... Palamedu Jallikkattu completed!

 

தைப்பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டியுள்ளது. நேற்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிந்தது.

 

 

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். மொத்தமாக ஏழு சுற்றுக்கள் நடைபெற்றது. 7 சுற்றின் முடிவில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மதுரை மாவட்டம் பொதும்பை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழரசன், ராமச்சந்திரன் என்ற இருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

 

Prabhakaran scores a hat trick ... Palamedu Jallikkattu completed!

 

 

போட்டியில் வெற்றிபெற்ற பிரபாகரன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''இதுவரை எத்தனை மாடுகள் பிடித்துள்ளேன் என்று அவர்கள் சொல்லவில்லை. என் கணக்குப்படி நான் இருபத்தொரு மாடுகளை பிடித்துள்ளேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. மூன்றாவது முறையாக நான் முதல் இடம் வந்தது மகிழ்ச்சி. மாடுபிடி வீரர்களுக்கு சவாலாக இருந்தது. போன வருஷம் ஒவ்வொரு ஊர்லயும் அடைக்கிற காளைகளை அப்படியே கொண்டு வருவாங்க. அவனியாபுரத்தில் நடந்தபின் அடுத்தது பாலமேட்டில் நடக்கும். அப்பொழுது மாடு சோர்வடைந்து இருக்கும். ஆனால் இந்த வருடம் ஆன்லைன் மூலமாக செய்ததால் ஆளாளுக்கு பிரித்துக் கொண்டார்கள். எனவே மாடுகள் எல்லாம் ஃபுல் எனர்ஜியில்தான் இருந்தது. எனவே மாடுகளை பிடிப்பது சிரமமாக இருந்தது.

 

 

ஆன்லைன் பதிவு ஈசியாக இல்லை. ரொம்ப கடுமையாக இருந்தது. நான் டிரைவராக வேலை செஞ்சிட்டு இருக்கேன். நான் போன வருஷமே சொன்னேன் அரசு வேலை கொடுத்தா நல்லா இருக்கும்னு. இந்த தடவை அரசு வேலை கொடுத்தால் நல்லா இருக்கும். முதல்வர் ஒரு முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுவேலை கொடுத்தால் நல்லா இருக்கும். இந்த தடவை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் பார்ப்போம். மாடுபிடி வீரர்களை அங்கீகரிக்க வேண்டுமென நினைக்கிறேன். எல்லோரும் நினைக்கிறார்கள் மாடுகளை பிடிப்பது காலி பசங்கன்னு. இது காலி பசங்க பிடிக்கிறது கிடையாது. இதுக்குள்ள போனா நல்ல எதிர்காலம் இருக்கும் என்பதற்காகதான் இந்த அரசு வேலையை கேட்கிறோம். தமிழர் வீரத்திற்கு  மதிப்பு கொடுக்க வேண்டும். கொடுத்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்'' என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனுமதி இன்றி நடந்த ஜல்லிக்கட்டு; 10 பேர் மீது பாய்ந்த வழக்கு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Case against 10 people who conducted Jallikattu without permission

ஜல்லிக்கட்டு, வடமாடு போன்ற விளையாட்டுகள் நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் அதிக ஜல்லிக்கட்டுகள் நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த கட்டுப்பாடுகள், விதிமுறைகளால் ஜல்லிக்கட்டு நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசு விதிமுறைகளை கடைபிடித்து நூறுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை(17.3.2024) புதுக்கோட்டை மாவட்டம் வானக்கண்காடு முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல், அரசு அனுமதியும் பெறாமல் 50 க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு நடப்பதாக வடகாடு போலீசாருக்கு தகவல் கிடைத்து சென்று பார்த்த போது ஜல்லிக்கட்டு நடந்துள்ளது.

இதனையடுத்து வடகாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமுகமது கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி ஒன்றியம் வானக்கண்காடு கிராமத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை (எ) சுந்தராஜ், ராஜேஷ், ராம்குமார், அஜித், ஸ்ரீதரன், வீரையா கருக்காகுறிச்சி தெற்கு தெரு கிராமத்தைச் சேர்ந்த குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜன் ஆகிய 10 பேர் மீதும் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.