ADVERTISEMENT

"சென்னையைப் போல் முதல்வர் திருச்சியையும் கவனிக்கிறார்" - அமைச்சர் நேரு 

02:47 PM Jan 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரிய மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ள அரசு இயன்முறை மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சியின் சார்பில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நேரு, "நீண்ட காலமாக இந்தப் பணியை செய்ய வேண்டும் என்று கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கு தொகுதி மக்களுக்கு செய்ய முடியவில்லை. தற்போது முதல்வர் திருச்சிக்கு எது வேண்டும் என்று கேட்டாலும் செய்வதால், இந்தப் பணி சாத்தியமானது. 2006-2011, 1996-2001 காலகட்டத்தில் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது அரியமங்கலம் பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்க அனுமதி கேட்டோம். அதேபோல் திருவெறும்பூர் பாலத்திற்கு அருகில் அன்றைய தலைவர் சோமு கேள்வி கேட்டபோது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அனுமதி அளித்தார். திருச்சி மாவட்டத்தில் பொன்மலையில் தொடங்கப்பட்ட திட்டம், காங்கிரஸ் காலத்தில் ஆரம்பித்த திட்டமாக இருந்தாலும், 90எம்எல்டி லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் பெற்று வந்தோம். ஆனால் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது காவிரியில் தண்ணீர் வேண்டாம், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம் என்று கேட்டோம். ஏன் கொள்ளிடத்தில் வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். கொள்ளிடம் தண்ணீர் குடிப்பதற்கு நன்றாக இருக்கும் என்று கூறி 220 கோடி மதிப்பீட்டில் 120எம்எல்டி பெறப்பட்டது. ஆனால் இந்த திட்டம் முடியும்போது 280 கோடி ரூபாய் செலவானது. இன்று திருச்சி மிளகு பாறையில் லாரியில் தண்ணீர் பிடித்து வந்தனர். எனவே இந்த முறை 95 லட்சம் மதிப்பில் பெரிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் இருந்தபோது 33 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு 100 எம்எல்டி கொண்டு வந்தோம்.

உறையூர் பகுதியில் போதிய தண்ணீர் வசதி இல்லாத நிலையில் கடந்த ஆட்சியில் அப்பகுதிக்கு கொண்டு வந்த திட்டங்கள் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது கம்பரசம்பேட்டை பகுதியில் திறக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 11 நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நேரடியாக உறையூர், தில்லைநகர், மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரும்பு சத்து இல்லாத நல்ல சுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தருவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுகிறது. தேசிய கல்லூரி பகுதியில் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 400 மீட்டர் தூரம் இணைக்க வேண்டி உள்ளது. அந்தப் பணிகள் முடிந்தால் எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் கிடைக்கும். உறையூர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பைப்புகள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிய பைப்புகள் போடப்பட்டுள்ளது. மக்களுக்குச் சரியான நேரத்தில் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதை வடிகால் திட்டங்கள் அனைத்தும் விஸ்தரிப்பு பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகள் 470 கிலோமீட்டர் தூரத்திற்கான 50 சதவீத பணிகள் முடிவடைவதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள சாலைகளும் விரைவில் முடியும். இதற்கு இடைப்பட்ட காலம் மழை காலம் என்பதால் தாமதமாகிவிட்டது.புதிய கழிவறைகள், புதிய ரேஷன் கடைகளை கட்டி வருகிறோம். தமிழக முதல்வர் கூறியது போன்று, 380 கோடியில் புதிய பேருந்துகள், 450 கோடியில் மார்க்கெட்கள் மற்றும் வணிக வளாகங்கள் வரப் போகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது போல தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் பேருந்து நிலையங்கள், 35 இடங்களில் மார்க்கெட், அறிவித்து அரசாணை வெளியிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரை, சேலம், கோவை பாதாள சாக்கடை திட்டம் என்று பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டதோ அனைத்து இடங்களுக்கும் நிதி ஒதுக்கி பணிகள் துவங்க உள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மேலாண் இயக்குநராக இருந்தவர். எனவே அவர் இந்த துறைக்கு என்று 34 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பேசினார். அதில் மாநில அரசு 8500 கோடி, மத்திய அரசு 8000 ஆயிரம் கோடி, ஜப்பான் வங்கியில் இருந்து 16000 கோடி நிதி பெற முதல்வர் அனுமதி வழங்கி இருக்கிறார். எல்லா இடங்களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு செல்வதும், பழைய குடிநீர் திட்டங்களைப் புதுப்பிப்பதும், மணப்பாறையில் குடிநீர் சரியாக வருவதில்லை என்ற நிலை இருந்தது. வாரத்திற்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் கோவையில் சாலைகளை செப்பனிட வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கு 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக 240 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து காவிரி, கொள்ளிடம் கரைகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் சொல்லும் வேலையை செய்தாலே சிறந்த நகரமாக மாறிவிடும். பஞ்சப்பூரில் புதிதாக 270 கோடி ரூபாய் செலவில் 100 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு திடல் அதே பகுதியில் தான் அமைய உள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான 540 ஏக்கர் நிலம் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். அவர் சென்னையை கவனிப்பது போல திருச்சியையும் கவனிக்கிறார்" என்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT