coronavirus relief fund minister kn nehru in trichy

Advertisment

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் துறை சார்பாக கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (13/06/2021) காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என். நேரு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதியின் இரண்டாவது தவணை ரூபாய் 2,000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி என். சிவா, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் திருநாவுக்கரசர், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லால்குடி சௌந்தரபாண்டியன், துறையூர் ஸ்டாலின் குமார், முசிறி காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிற்றரசு, மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

coronavirus relief fund minister kn nehru in trichy

Advertisment

பின்னர் திருச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷன் மேம்பாலம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், "இன்னும் இரண்டொரு நாளில் டெல்லி சென்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து, இது தொடர்பாக பேசி உரிய அனுமதியுடன் வருவேன்; பணி விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் கே.என். நேருவிடம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், "பாண்டிச்சேரியில் ஆளுகிற பாஜக கூட்டணி அரசு அங்கு நடத்துவது குறித்து பேசவில்லை. நீ செஞ்சா சரியா, நான் செஞ்ச தப்பா, மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடமா. பாஜக ஆளும் மாநிலங்களில் திறந்திருக்கிறார்கள்" என்றார்.

கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி, டாஸ்மாக் கடைகள் திறப்பது தவறு என்று சொல்லியிருக்கிறார்களே? என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "கூட்டணிக் கட்சி சொல்வது முழுவதும் ஏற்றுக்கொள்வதில்லை. எது மக்களுக்கு சரியாக இருக்குமோ, அதனைக் கூட்டணிக் கட்சியுடன் இணைந்துதான் செய்ய முடியும். கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தலைவர் அழைத்துப் பேசினால் எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் கூட்டணிகள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்" என நகைச்சுவையாக கூறினார்.