ADVERTISEMENT

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கல்வித் திட்டம்; அமைச்சர் நேரடி விசிட்  

05:51 PM Nov 18, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அன்பான அழைப்பை ஏற்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது குழுவினருடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலகங்களைப் பார்வையிட்டார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றலுக்குத் துணைநிற்றல் (TEALS) திட்டத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை மதிப்பீடு செய்வதற்காக இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் தலைமையிலான குழுவினரை தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவின் இயக்குநர் சிசில் சுந்தர், பொது மேலாளர் சேவைகள் ஜெய் நடராஜன், TEALS திட்டத்தின் தலைவர் பீட்டர் ஜூபே. நிறுவனத்தின் களத் தலைமை ஆண்ட்ரியா ரூசோ ஆகியோர் வரவேற்றனர்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழ்பெற்ற பாஸ்டன் நகரில் உள்ள கேம்பிரிட்ஜ் ரிண்ட்ஜ் & லத்தீன் பப்ளிக் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டு அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கும் ரோபோட்டிக் கலை, செயற்கை நுண்ணறிவு, கணினி எழுத்தறிவு கலைத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மைக்ரோசாஃப்ட் குழுவினர் மற்றும் தொழில்நுட்பத் தொழிலகங்களின் பிரதிநிதிகள், மைக்ரோசாஃப்ட் TEALS திட்டத்தின் வாயிலாக தொழில்நுட்பக் கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களை கல்லூரிக் கல்விக்கு தயார் செய்தல் ஆகியவை குறித்து அமைச்சருக்கு விவரித்தனர்.

பள்ளிப் பார்வையைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப மையத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பல்வேறு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களையும், நிறுவனத்தினரையும் சந்தித்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான பாடத்திட்டம் குறித்து விரிவாக விவாதித்தார். இந்த விவாதம் ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல் ஆகியவற்றில் நவீனப் பயிற்சி உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களுடன் கூடிய பாடத்திட்டம் மற்றும் மைக்ரோசாப்ஃட் நிறுவனத்துடன் நிலைத்த ஆக்கப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. இந்தக் கருத்துரு தனது துறையால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் இதில் பயன்பெறும் மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சான்றிதழ்கள் வழங்கிட முன்வர வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் TEALS திட்டத்தின் மூலம் மாணவர்களுக்குத் தர நிர்ணயம் வழங்கிட பரவலாக உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமல் செயல்படுவதற்கான வெளியையும் பொதுத்துறை மற்றும் தனியார்த் துறை பங்கேற்பின் தேவையையும் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சிசில் சுந்தர் மற்றும் ஜெய் நடராஜன் ஆகியோர் வலியுறுத்தினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT