ADVERTISEMENT

மிக்ஜாம் புயல் பாதிப்பு எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

06:22 PM Dec 07, 2023 | prabukumar@nak…

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் சில இடங்களில் வெள்ள நீர் வடியாமல் இன்னும் தேங்கியுள்ளதால், மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குக் கடந்த 4 ஆம் தேதி முதல் (04.12.2023) இன்று (07.12.2023) வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. அதே சமயம் புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (08.12.2023) அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே வேளையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT