Skip to main content

'சென்னையில் 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம்'- தமிழக முதல்வர் அறிவிப்பு!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

chennai districts 12 days complete lockdown cm palanisamy announced


சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19- ஆம் தேதி முதல் மீண்டும் முழு பொதுமுடக்கம் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பரவலை தடுக்க சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஜூன் 19- ஆம் தேதி இரவு 12.00 மணிமுதல் ஜூன் 30- ஆம் தேதி இரவு 12.00 மணிவரை மீண்டும் முதல் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் 12 நாட்கள் முழு பொதுமுடக்கம்  அமல்படுத்தப்படுகிறது 

காய்கறி கடைகள், மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள் காலை 06.00 மணிமுதல் மதியம் 02.00 மணி வரை மட்டுமே செயல்படும். காய்கறி, பழங்களை விற்பனை செய்யும் நடமாடும் கடைகளுக்கும் மதியம் 02.00 மணிவரை மட்டுமே அனுமதி. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை. சரக்கு போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எவ்வித தடையும் கிடையாது. 

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவை வழக்கம்போல் இயங்கும். உணவகங்களில் காலை 06.00 மணிமுதல் இரவு 08.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. அவசர மருத்துவ தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். முழு பொதுமுடக்க காலத்தில் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்பட மாட்டாது. 

ஏடிஎம் மற்றும் அது சார்ந்த வங்கிப்பணிகள் மற்றும் போக்குவரத்து வழக்கம்போல் செயல்படும். முழு பொதுமுடக்க காலத்தில் மட்டும் வங்கிகள் 33% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். முழு பொதுமுடக்க காலத்தில் காலை 08.00 மணிமுதல் மதியம் 02.00 மணிவரை ரேஷன் கடைகள் செயல்படும். 

சென்னை காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் தலா ரூபாய் 1,000 வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம், பிற நலவாரிய உறுப்பினர்களுக்கு தலா ரூபாய் 1,000 நிவாரணம் வழங்கப்படும். 

திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி,  கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம், கூடுவாஞ்சேரி ஆகிய பேரூராட்சிகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அதேபோல் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும். 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது; நிவாரணப் பொருட்கள் வீடு தேடி வரும். மாநில அரசுத்துறைகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படும். 

சென்னையில் இருந்து பிற மாவட்டங்கள் செல்ல தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே இ -பாஸ் தரப்படும். திருமணம், மருத்துவம், இறப்பு போன்றவற்றுக்காக செல்ல தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 

சென்னையில் பி.சி.ஆர். பரிசோதனை செய்துக்கொண்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையில் பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை வளாகம் அல்லது அதன் அருகிலேயே தங்க வைக்கப்பட்டு பணிபுரிய அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் பி.சி.ஆர். சோதனை செய்ய வேண்டும். சென்னையில் பொது முடக்க காலத்தில் தினந்தோறும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல அனுமதி இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலைகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் செயல்பட வேண்டும். 12 நாட்களுக்கு பணியிடத்திலேயே தங்கிபணிபுரியும் தொழிலாளர்களைக் கொண்ட கட்டுமான பணிக்கு அனுமதி. 

ஜூன் 21, ஜூன் 28 ஆம் தேதிகளில் எந்தவித தளர்வும் இன்றி முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும்.  ஜூன் 20- ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிமுதல் ஜூன் 22- ஆம் தேதி காலை 06.00 மணிவரை முழு பொதுமுடக்கம். இரண்டு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவம் சார்ந்த சேவைகளுக்கு மட்டுமே அனுமதி. இரண்டு நாட்களிலும் அவசர மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே தனியார்  வாகனங்களுக்கு அனுமதி.

கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படாது. 104 மற்றும் 108 சேவைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் 2 கி.மீ தொலைவிற்குள் பொருட்களை வாங்க வேண்டும். 

அம்மா உணவகங்கள், ஆதரவற்றோருக்காக உள்ளாட்சி, அரசால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் செயல்படும். நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள், தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள், பிற அமைப்புகள் இயங்க அனுமதி அளிக்கப்படும். 

பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் நோய் பரவலைத் தடுக்க முடியாது. பொது மக்கள் வெளியில் செல்லும்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம். அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.