ADVERTISEMENT

மிக்ஜாம் புயல் பாதிப்பு; தன்னார்வலர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு

04:47 PM Dec 06, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவர்களை ஒருங்கிணைத்து தேவைப்படும் இடங்களில் அனுப்பி வைப்பதற்கு ஏதுவாக ஒரு உதவி மையம் (HELP DESK) சென்னை, எழிலக வளாகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள் மற்றும் அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை உதவி ஆணையர் ஷேக் மன்சூரின் 9791149789 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் பாபுவின் 9445461712 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், உதவி ஆணையர் சுப்புராஜ் 9894540669என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், பொதுவாக 7397766651 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள பதிவு செய்து கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வலர்கள், மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT