Skip to main content

‘நிவாரணப் பணிகளைத் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது’ - மத்தியக் குழு பாராட்டு

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Govt of TN has carried out the relief work very well Appreciation of the Central Committee

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து பேரிடர் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் இக்குழு வருகை தந்துள்ளது. இரண்டு குழுக்களாகப் பிரிந்து வட மற்றும் தென் சென்னை பகுதிகளில் ஆய்வு செய்தனர். மேலும் இக்குழுவினர் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கடும் பாதிப்புகளைச் சந்தித்த சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இரண்டாம் நாளாக மத்தியக் குழு ஆய்வு செய்தது. இந்த நிலையில், புயல் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த மத்தியக் குழுவினர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியக் குழு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகளும்  இடம்பெற்றிருந்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்தியக் குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி பேசுகையில், “மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளைத் தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக ரூ. 6 ஆயிரம் நிவாரணம் அறிவித்ததற்கு பாராட்டுகள். வானிலை மையத்தின் முன்னெச்சரிக்கையை அடுத்து தமிழ்நாடு அரசு தகுந்த அறிவியல்பூர்வ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. செம்பரம்பாக்கம் ஏரியை முன்கூட்டியே திறந்து விடப்பட்டதால் வெள்ளச் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர்களைப் பாதுகாத்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தமிழக அரசு தடுத்துள்ளது. தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக்குழு,  தீயணைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு நிவாரணப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டனர். தங்குமிடம், உணவு, மருந்து பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை சிறந்த முறையில் தமிழக அரசு மக்களை பாதுகாத்துள்ளது. வெள்ளச் சேத விவரங்களைத் தமிழக அரசு எங்களிடம் அளித்துள்ளது. எங்கள் குழுவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல இடங்களைப் பார்வையிட்டு உண்மை நிலவரங்களை ஆய்வு செய்து விவரங்களைத் திரட்டியுள்ளது. அதன் அடிப்படையில் குழு தயாரிக்கும் ஆய்வு அறிக்கை மத்திய அரசுக்கு அளித்து நிவாரண உதவிகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்