ADVERTISEMENT

திரையில் எம்.ஜி.ஆர்.! நிஜத்தில் கே.டி.ஆர்.! -நிறைவேறிய ‘பாக்ஸிங்’ கனவு!

07:30 PM Feb 18, 2020 | kalaimohan

“மனதுக்குள் முடிந்து வைத்த ஆசை போலும்..” என்றார் பத்திரிகை நண்பர் ஒருவர், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகரில் குத்துச்சண்டை போட்டியைத் தொடங்கி வைத்து, தானும் ஆர்வத்தோடு கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டு குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் ‘சும்மாகாச்சும்’ சண்டையிட்ட போது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

‘கமல்ஹாசனோடு அரசியல் ஸ்டண்ட்.. ‘மோடி-டாடி’ போன்ற பஞ்ச் டயலாக்குகள்.. இதெல்லாம் வழக்கமானதுதான். குத்துச்சண்டை ‘வேறமாதிரி’ தெரிகிறதே?’ என்று கேட்டபோது, கே.டி.ராஜேந்திரபாலாஜியின் நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் எடுத்துவிட்டார்.

“எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட நாள் 1967, ஜனவரி 12. அதே ஆண்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வந்த காவல்காரன் திரைப்படத்தில் குத்துச்சண்டை போட்டியில் வில்லன் மனோகரை வீழ்த்தி வெற்றி பெறுவார், எம்.ஜி.ஆர். அறுவை சிகிச்சை மூலம் எம்.ஜி.ஆரின் தொண்டையிலிருந்து குண்டை அகற்றினாலும், அவரது குரல் பாதிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகளில், அவரது வழக்கமான குரலைக் கேட்க முடியாது. குரல் உடைந்துபோய், வார்த்தைகள் தெளிவில்லாமல் ஒலிக்கும். மாறிப்போன அவரது குரலே, காவல்காரனுக்கு பெரிய விளம்பரத்தைத் தேடித்தந்தது. அத்திரைப்படம் அமோக வெற்றி பெற்றது.


சிறுவயதிலிருந்தே ராஜேந்திரன் (கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஒரிஜினல் பெயர்) எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். காவல்காரன் ரிலீஸானபோது, அவருக்கு மூன்று வயதுதான். அப்போதெல்லாம், சிவகாசி பகுதியில், பழைய சினிமாக்களை திரும்பத் திரும்ப டூரிங் டாக்கீஸில் திரையிடுவார்கள். அந்த நேரத்தில், காவல்காரனை பலமுறை பார்த்திருக்கிறார் ராஜேந்திரன். குறிப்பாக, வில்லன் மனோகருடன் கையில் உறை அணிந்து எம்.ஜி.ஆர். மோதும் பாக்ஸிங் காட்சியின் போது ‘விடாதீங்க வாத்தியாரே!’ என்று விசிலடித்து ஆரவாரம் செய்வார். இரவுக் காட்சி முடிந்து வீட்டுக்கு வந்து தூங்கும்போது, கனவிலும் ‘பாக்ஸிங்’ அவரை விடாது.


பேட்டிகளில் வீரதீரமாகப் பேசினாலும், கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு குழந்தை மனதுதான். அதனால்தான், விருதுநகரில் விளையாட்டு போட்டிகளைத் துவக்கிவைத்த போது, கைகளில் உறையை மாட்டிக்கொண்டு, குத்துச்சண்டை வீரரிடம் ‘பாவ்லா’ காட்டி மகிழ்ந்தார். இதற்குக் காரணம், காவல்காரனில் எம்.ஜி.ஆர். போட்ட பாக்ஸிங் ஃபைட், அவரது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டதுதான். பார்ப்பதற்கு வேண்டுமானால் அமைச்சர் போட்ட குத்துச்சண்டை ‘சின்னப்புள்ளத்தனமா’ இருக்கலாம். இது, அவரது பலநாள் ஏக்கம்.” என்று பெருமூச்சு விட்டார், அந்த நண்பர்.

வாய்ப்பு கிடைத்தாலும், மனதிலுள்ள ஆசைகளை எல்லோராலும் நிறைவேற்றிவிட முடியாதுதான். அதற்கெல்லாம், ஒரு ‘மனதைரியம்’ வேண்டும். கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ‘அது’ ரொம்பவே இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT