ADVERTISEMENT

உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தான் உருவாக்கிய எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய எம்.ஜி.ஆர். ரசிகர். 

11:20 PM Jan 17, 2019 | bagathsingh

ADVERTISEMENT

கொத்தமங்கலம் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த செலவில் எம்.ஜி.ஆர். சிலை கட்டிய கூலி தொழிலாளி தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு கஜாவால் வீட்டையும் இழந்து வறுமையில் வாடினாலும் எம்.ஜி;ஆர் பிறந்த நாளை மறக்காமல் குழந்தைகளின் உதவியுடன் கைத்தாங்களாக வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை இனிப்பு வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். (வயது 48). கூலித் தொழிலாளியான இவர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். கீரமங்கலத்தில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடையில் தொழிலாளியாக வேலை செய்தவர். பிறகு வாடகை சைக்கிள் கம்பெனிகள் நலிவுற்ற நிலையில் தொழிலை இழந்து பல்வேறு கூலி தொழில் செய்து வருகிறார்.
எம்.ஜி.ஆர் மீது தீவிர பற்று கொண்டு கூலிவேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் ரூ. 20 ஆயிரம் செலவு செய்து 1994 ஆம் ஆண்டு கொத்தமங்கலம் கிராமத்தில் எம்.ஜி.ஆர்.க்கு சிலை அமைத்தார். அந்த சிலையை தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அப்போதைய எம்ஜிஆர் அதிமுக நிறுவனருமான திருநாவுக்கரசர் 1995 ம் ஆண்டு திறந்து வைத்தார்.
அன்று முதல் எம்ஜிஆர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அச்சிலையை புதுப்பித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்குவதை மாணிக்கவாசகம் வழக்கமாக கடைபிடித்து வருகிறார்.

தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் கூலி வேலை செய்ய முடியாத நிலையில் வறுமையில் உணவிற்கே வசதி குறைவான நிலையில் வாழ்ந்து வருகிறார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் எம்ஜிஆர் பிறந்த நாளான 17; தேதி தனது நண்பர்கள் உதவியுடன் எம்.ஜி.ஆர் சிலையை புதுப்பித்வர் தனது மகள்கள், குடும்பத்தினர் உதவியுடன் கைத்தாங்கலாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து கண்ணீர் மல்க வணங்கினார். தொடர்ந்து அங்கு நின்ற மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். வறுமையிலும் தனது தலைவனை மறக்க மனமின்றி பிறந்த நாளை கொண்டாடியது காண்போரை நெகிழ வைத்தது.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்.. மாணிக்கவாசகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். 25 ஆண்டுகளுக்கு முன்பே கூலி வேலை செய்து தான் சம்பாதித்த சேமித்த பணத்தின் தன் குடும்பத்திற்கு கூட செலவு செய்யாமல் ரூ. 20 ஆயிரத்தை கொண்டு எம்.ஜி.ஆர். க்கு சிலை அமைத்ததார். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் எம்ஜிஆர் பிறந்தநாளை விமரிசையாக அவர் கொண்டாடி வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதோடு அவரது குடும்பமும் வறுமையில் தவிக்கின்றது. ஆனால் அந்த சூழலில் கூட அவர் எம்ஜிஆரை மறக்காமல் இன்றும் அவரது பிறந்தநாளை தன்னால் இயன்றதை செய்து கொண்டாடி வருகிறார்.

மேலும் கஜா புயலில் சேதமடைந்த சிறிய வீட்டில் மூன்று பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவர்களை படிக்க வைக்க முடியாமலும் அன்றாட உணவுக்கு கூட முறையான வழியின்றி தவிக்கும் அவரது குடும்பத்திற்கு அரசு ஏதேனும் உதவிகள் செய்தால் ஏழ்மையில் தவிக்கும் எம்ஜிஆரின் ரசிகரான அவருக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT