ADVERTISEMENT

இரு பிரிவுகளாக இருக்கும் வியாபாரிகள்..! பதட்டத்தில் இருக்கும்  நேதாஜி மார்க்கெட்! 

06:00 PM Oct 08, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோட்டின் பிரபலமான நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட், தற்போது வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வருகின்றது. இங்கு வியாபாரம் செய்வோர் ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் சங்கம் நடத்தி வருகிறார்கள். அதில் 807 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக சங்கத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளதாகவும், உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வியாபாரிகளில் ஒரு பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சங்க உறுப்பினர்களுக்கு வீட்டுமனை நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வியாபாரியிடமும் ரூபாய் 70 ஆயிரம் வீதம் ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் பணம் பெற்றுக்கொண்டு நிலம் வழங்காமல் உள்ளார்கள். அவர்கள் நிலம் வழங்கும் வரை தற்போதைய நிர்வாகிகளே தொடர வேண்டும் என்று மற்றொரு பிரிவு வியாபாரிகளும் கூறி வருகின்றனர்.

இதனால் வியாபாரிகள் இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும். சுங்க கட்டணம் வசூல் செய்வதில் ஒப்பந்ததாரர்கள் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கிறார்கள். நியாயமான சுங்க கட்டணம் வசூலிக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகளில் ஒரு பிரிவினர் 8ந் தேதி மார்கெட்டில் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

மார்க்கெட்டில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இரு பிரிவுகளாக வியாபாரிகள் உள்ளதால் கடையடைப்பு போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் இருக்க ஈரோடு போலீசார் மார்க்கெட் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் அங்கு ஒரு விதமான பதட்டமான சூழல் நிலவியது. மேலும் சங்கத் தேர்தலை நடத்த வலியுறுத்தி காய்கறி வியாபார சங்கத்தின் ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT