/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1530.jpg)
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,ஏழு மாடி கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு ஆட்சியர் அலுவலகத்துடன் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களும் தனித்தனியாக செயல்பட்டுவருகின்றன. இந்தக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளராக 59 வயது நாகராஜன் என்கிற அலுவலர் பணியாற்றிவந்தார். இளநிலை பொறியாளராக லீலாவதி பணியாற்றுகிறார்.
இந்த அலுவலகம் திருப்பூர் மண்டலத்துக்கு உட்பட்டதாகும். ஈரோடு மாவட்டத்தின் 42 பேரூராட்சிகளும், திருப்பூர் மாவட்டத்தின் 15 பேரூராட்சிகளும் இந்த அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்குட்பட்ட 52 பேரூராட்சிகளில் நடைபெறவுள்ள அரசின் திட்டப்பணிகளுக்காக கடந்த 22ஆம் தேதி டெண்டர் விடப்பட்டது. அதைத்தொடர்ந்து, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்களிடமிருந்து அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் வசூல் நடப்பதாக ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் போலீசார் அதிரடியாக அந்த அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். போலீசாரின் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 51 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது. இதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, ஈரோடு மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் லீலாவதி, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி பேரூராட்சி இளநிலை பொறியாளர் செல்லமுத்து, திருப்பூர் மாவட்டம் மூலனூர் பேரூராட்சி எலக்ட்ரீசியன் செல்வம், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த தற்காலிகப் பணியாளர் வெங்கடேஷ் ஆகிய 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.
பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் வீடு கோவை மாவட்டம் துடியலூரில் உள்ளது. 24ஆம் தேதி (இன்று) காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டிற்குச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அங்கும் ரொக்கப் பணம் மற்றும் ஆவணங்கள் கிடைத்திருக்கிறது. இதற்கிடையேலஞ்ச ஒழிப்பு போலீசார், ஐந்து பேர் மீது பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், அவர்கள் ஐந்து பேர் மீதும் 25ஆம் தேதி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அதிரடியாக தற்காலிக பணி நீக்கமும் (சஸ்பென்ட்) செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்ந்து தீவிர விசாரணையும் நடந்துவருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)