ADVERTISEMENT

பூஞ்சை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு- பரிதவிக்கும் நோயாளிகளின் உறவினர்கள்..!

04:21 PM May 29, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


கரோனா இரண்டாம் அலை குறைந்துவரும் அதேநேரத்தில் நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருப்பவர்கள், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர்கள், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களை அதிகமாக பூஞ்சை நோய் தாக்கும். தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், அதிலிருந்து குணமானவர்களில் சிலரையும் இந்தநோய் தாக்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வேலூர் மாவட்டத்தில் சுமார் 50க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியை சேர்ந்தவர் 37 வயதான சின்னராஜ். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். கரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கியது. இதனால் அதிர்ச்சியான மருத்துவர்கள் அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு இடமாற்றம் செய்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இறந்துள்ளார்.

இப்படி தமிழகத்தில் 400க்கும் மேற்பட்டவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிக்க தனி வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன என மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியுள்ளார். அதோடு, 13 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தமிழகத்தில் பூஞ்சை நோய் குறித்த தகவல்களை பெறவும், மருந்துகள் தேவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் இவ்வாறு கூறப்பட்டாலும் தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான மருந்து கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுக்குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறும்போது, கருப்பு பூஞ்சை நோய்க்கு ஆம்ஃபோடெரிசின் – பி என்னும் மருந்து அல்லது அம்ஃபோ –பி என்கிற மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து தமிழகத்தில் பற்றாக்குறையாக உள்ளது.

வெளி மார்க்கெட்டிலும் கிடைப்பதில்லை. தனியார் மருத்துவமனைகள் இதனை நீங்கள் வெளியில் வாங்கி வாருங்கள் எனக் கூறுகிறது. தமிழகத்தில் உள்ள பிரபலமான மருந்தகங்களில் எங்கு கேட்டாலும், விசாரித்தாலும் இல்லை என்றே பதில் சொல்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் என்கிறார்கள். அருகில் உள்ள மருத்துவமனைகளில் எங்கு கேட்டும் கிடைக்கவில்லை. வேறு எந்த அரசு மருத்துவமனையில் கிடைக்கிறது என்றும் தெரியவில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசு மருத்துவமனையில் மருந்து எப்படி வாங்குவது என்கிற வழிமுறையும் தெரியவில்லை. அரசு இதில் தீவிரமாக கவனம் செலுத்தி அந்த மருந்து சுலபமாக கிடைக்க வழி செய்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுக்கிறார்கள் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT