ADVERTISEMENT

வைகோ முன்னெடுத்த போராட்டம்; காப்பாற்றப்பட்ட யானைமலை; 13 ஆண்டுகளாகத் தொடரும் மாரத்தான்

04:04 PM Jan 14, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், யானைமலை பகுதியில் வருடந்தோறும் மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி, ‘சாதி மத எல்லைகளைக் கடந்து மனித நேயத்தால் ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளில் சமூக நல்லிணக்க மாரத்தான் போட்டியாக இன்று நடைபெற்றது. இந்த போட்டியை மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார்.

13 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விழிப்புணர்வுக்காக மதிமுக சார்பில் தொடங்கப்பட்ட இந்த மாரத்தான் போட்டி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளில் நடைபெற்று வருகிறது. உலகில் பல்வேறு இடங்களில் ஒற்றைப் பாறையாலான மலைகள் இருக்கின்றன. அதில் குறிப்பிடத்தக்கவையில் ஒன்று மதுரை மாவட்டம் யானைமலை. இந்த யானைமலையில், எட்டாம் நூற்றாண்டில் மலையைக் குடைந்து கட்டப்பட்ட புகழ்பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. அதேபோல், ஒன்பதாம் நூற்றாண்டில் சமணர்கள் இங்கு வந்ததற்கான ஆதாரங்களாக சமணப் படுகைகள் காணப்படுகின்றன. இப்படி இயற்கை மற்றும் வரலாற்று ரீதியாக பல்வேறு சிறப்பு பெற்ற இந்த யானைமலையை சிற்பக்கலை நகரமாக மாற்றுவதாக 13 வருடங்களுக்கு முன்பு அன்றைய அரசு அறிவித்தது.

அரசின் இந்த முடிவிற்கு அப்பகுதி மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையேற்று நடத்தினார். மேலும், சிற்பக்கலை நகரமாக யானைமலை அறிவிக்கப்பட்டால் அதன் விளைவு எவ்வாறாக இருக்கும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. வைகோவின் இப்படியான தொடர் போராட்டத்தை தொடர்ந்து அரசு அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இருந்து பின்வாங்கியது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் யானைமலை மீட்பை நினைவுகூறும் வகையில் மதிமுக சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வகையில் தற்போது சமூக நல்லிணக்கம் சீர்குலைந்து வருவதை உணர்ந்து இந்த வருடம் நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு ‘சாதி மத எல்லைகளைக் கடந்து மனித நேயத்தால் ஒன்றிணைவோம்’ என்ற கருப்பொருளில் சமூக நல்லிணக்க மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசிய துரை வைகோ, “நண்பர்களை நாம் தேர்ந்தெடுக்கும் போது நல்லவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நண்பர்களை சாதி, மத அடிப்படையில் தேர்ந்தெடுக்கக்கூடாது. உங்களுடைய முயற்சியை ஊக்குவிப்பவர்களாக உங்களுடைய நண்பர்கள் இருக்க வேண்டும்” என்றார். இந்த மாரத்தானில் ‘மனிதம் ஏற்போம்’ என்பதே முழக்கமாக இருந்தது. இந்த மாரத்தான் போட்டி மதுரை மாவட்ட கிழக்கு ஒன்றிய மதிமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT