The central government should come forward to provide complete relief Durai Vaiko

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மாநிலப் பேரிடர் மீட்புக் குழு, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத்துறை, காவல்துறையினர் மற்றும் அனைத்து அரசுத் துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு முழுமையான நிவாரணம் வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும் எனமதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வங்கக் கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சியால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்கள் பெருமழையால் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் உள்ளிட்ட இதர சில மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள், பெருமழையால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

நான்கு தென் மாவட்டங்களிலும் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புற பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை முழுமையாகவோ, பகுதியாகவோ இழந்துள்ளனர். கிராமப்புறங்களில் பல நூற்றுக்கணக்கான மக்களின் வீடுகள் முழுமையாகவோ, பகுதியாகவோ சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளின் நெல் வயல்கள் நீரில் மூழ்கி, முழுமையாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. மக்காச்சோளம், உளுந்து, பாசி, வாழை போன்ற பணப்பயிர்கள் சாய்ந்தும் நீரில் மூழ்கியும், அறுவடை செய்ய முடியாத அளவுக்கு முழுமையாக சேதம் அடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் தாங்க முடியாத வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

Advertisment

The central government should come forward to provide complete relief Durai Vaiko

கிராம சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள் காட்டாற்று வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்துள்ளன. விவசாயிகளின் பல்வேறு பயிறு வகைகள், காய்கறிகளை சந்தைப்படுத்த முடியாமல் நட்டம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடியாத நிலையில், அவர்கள் தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துள்ள நிலையிலும், தங்களின் படகுகளைக் கொண்டு வந்து மக்களை காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். வர்த்தகம் முழுமையாக முடங்கியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள உப்பளங்கள் நீரில் மூழ்கிவிட்டது.

விவசாயிகள், விவசாயக் கூலி வேலை செய்யும் மக்கள் வேலை இழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் இயல்பு நிலை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு அறிக்கைகளாலும், கணிக்க முடியாத பெரும் மழை கொட்டும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் நேரடிக் கண்காணிப்பில், பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், அரசுத் துறையினர், அரசியல் கட்சிகள், தன்னார்வஅமைப்பினர் முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

The central government should come forward to provide complete relief Durai Vaiko

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரை நேற்று (19.12.2023) நேரில் சந்தித்து பெருவெள்ள சேதத்திற்கு இழப்பீடு கோரியுள்ளார். மத்திய அரசு உடனடியாக மத்திய ஆய்வுக் குழுவினை அனுப்பி, வரலாறு காணாத வகையில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள, தென் மாவட்டங்களின் சேத நிலவரத்தை முழுமையாக கணக்கிட்டு, தமிழ்நாடு அரசு கூறும் நிவாரணத்தை முழுமையாக விடுவித்திட வேண்டும். மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்ததற்கு விவசாயிகளுக்கு இழப்பீடும், காப்பீட்டுத் தொகையும், வீடு இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடு கட்டித்தருவதற்கும், சேதமடைந்த விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்குவதற்கும், சேதமடைந்த சாலைகள், குளங்களை முழுமையாக சீரமைப்பதற்கும்முன்னுரிமை வழங்கி நிவாரணம் வழங்கிட முன்வருமாறு, மத்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் மதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.