ADVERTISEMENT

9 வருடமாக பென்ஷன் கேட்டுப் போராடும் தியாகியின் மகள்... பாத்திரம் தேய்த்து பிழைக்கும் அவலம்!

10:00 AM Aug 11, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேசம் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்பது வருடமாக பென்ஷன் கேட்டுப் போராடி வருகிறார் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகள் ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரைச் சேர்ந்தவர் மாடசாமி. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் ஐ.என்.ஏ. படையில் அப்போதைய காலத்தில் ஏழாயிரம் டாலர் கொடுத்து இணைந்தவர். சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1972ன் போது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுதந்திரப் போராட்ட தியாகம் காரணமாக மாடசாமிக்கு தாமிரப் பட்டயம் வழங்கி கௌரவித்தார். மாடசாமிக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும் , ராமகிருஷ்ண போஸ், ராஜகோபால் என இரு மகன்களும், ராமஜெயம், இந்திரா என்று இருமகள்களும் உள்ளனர். மற்றவர்கள் திருமணமாகிச் சென்றுவிட 2002ல் தந்தை மாடசாமி காலமானார். திருமணமாகாமல் தனிமையான இந்திரா, தன் வயதான தாய் வள்ளியம்மாளுடன் வசித்திருக்கிறார்.

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு தாய் வள்ளியம்மாளும் வயது மூப்பு காரணமாக மரணமடைய, ஆதரவற்ற இந்திரா தனியே வசித்திருக்கிறார். இதையடுத்துத்தான் சுதந்திரப் போராட்டத் தியாகியின் வாரிசு என்ற அடிப்படையில் அவரின் வாரிசு வழி பென்ஷனுக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலமாக மத்திய அரசின் தியாகிகள் பென்ஷன் துறைக்கு ஆவணங்களுடன் மனுச் செய்திருக்கிறார். அன்று தொட்டு இன்று வரை 9 ஆண்டாக அவரின் பென்ஷனுக்கான போராட்டம் முடிவின்றித் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அவர் பேசுகையில், ''சுதந்திரப் போராட்ட தியாகி என்ற வகையில் அப்பாவுக்கு மத்திய அரசின் சுதந்திர சைனிக் சம்மன் பென்ஷன் கிடைத்தது. அவரது மறைவுக்குப் பின் அவரது குடும்பத்தில் திருமணமாகாத பெண் இருந்தா அவருக்குப் பென்ஷன் உரிமை உண்டுன்னு விதியிருக்கு. முறைப்படி மத்திய அரசு பென்ஷன் துறைக்கு பென்ஷன் கேட்டு மனு கொடுத்தேன். தாலுகா ஆபீஸ், முதல்வர் தனிப்பிரிவுன்னு பென்ஷனுக்கு பல தடவை மனு அனுப்பினேன். பதில் இல்லை. மதுரைக் கோர்ட்டிலும் முறையிட்டேன். 2014ல பென்ஷன் குடுக்கனும்னு தீர்ப்பாச்சு. மத்திய அரசுக்கு பென்ஷன் கேட்டு கலெக்டர் மூலமாகக் கடிதம் போச்சு. ஆனா அது தமிழ்ல இருக்கு ஆங்கிலத்தில் கடிதம் அனுப்புங்கன்னு கேட்டப்ப ஆங்கிலத்திலும் மத்திய பென்ஷன் துறைக்கு கடிதம் போச்சு. அப்புறமா சான்றொப்பம் இல்லைன்னாக. அந்த ஆவணங்களையும் வாங்கி அனுப்பினோம். அப்புறமா மொத்தப் பென்ஷன் பேப்பர்களை அந்த துறை திருப்பி அனுப்பிடுச்சி. எனக்கு இடி இறங்கின மாதிரி ஆயிடிச்சி.

எனக்கு 51 வயசாவுது. உடம்புல பிரச்சனை இருக்கு. ஆபரேஷன் பண்ணியிருக்கு. வேல செய்ய முடியல. ஆனா நான் இன்னும் பருவத்துக்கு வரல. சாப்பாட்டுக்கே கஷ்டம் ஆதரவில்லாத ஒண்டியான நா ஹோட்டல்ல பாத்திரம் கழுவி 100 ரூபாய் கூலி வாங்கி வாழறேன். என்னோட கஷ்டத்தப் பாத்து வீட்டு உரிமையாளர் வாடகை கேட்கல. பணம் கெடைச்சாக் குடுன்னு நல்ல மனசோட சொன்னார். மத்த தியாகிகளோட வாரிசுக உதவியிலயும் பக்கத்து வீட்டுக்காரவுக உதவியிலயும் இருக்கேன்.

ஒவ்வொரு சுதந்திர தின கொடியேற்றத்தன்னைக்கும் தியாகியோட வாரிசுன்ற முறையில் அழைக்கறாக. கலெக்டரும் சால்வைப் போட்டு வாழ்த்துறார். அது சாப்பாட்டுக்கு உதவுமா. அவங்க கேட்ட ரெக்கார்டுலாம் குடுத்திட்டேன். பென்ஷன கேட்டு தாசில்தார் ஆபீஸ், கலெக்டர் ஆபீசுன்னு வருசக் கணக்குல அலைஞ்சே ஓய்ஞ்சு போயிட்டேம்யா. இனிமே என்னய சுதந்திரதினத்திற்குக் கூப்பிடாதீங்க. அரசு மரியாதை வேணாம்னு சொல்லிட்டேம்யா, முடியல. வாழ முடியல. என்னயக் கருணைக் கொலை பண்ணிடுங்கன்னு ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் மனு அனுப்பிருக்கேன்யா'' என்றார் தொண்டை அடைக்க வேதனையோடு.

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகளின் நல சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா செயலாளரான செல்வமோ, ''அதிகாரிகளின் அலைக்கழிப்பினால்தான் தகுதியிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் பென்ஷனுக்கு விண்ணப்பிக்கல. முன்னாள் படைவீரர்களுக்கு நல வாரியம் இருப்பது போன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கும் நல வாரியம் அமைக்கப்படவேண்டும். திங்கள்கிழமை குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது போன்று விதி இருந்தும் தியாகிகளின் குறைதீர் கூட்டம் நடத்தப்படல. தியாகிகளின் வாரிசுகளுக்கு பென்ஷன் மற்றும் கல்வி வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தரப்படவேண்டும்'' என்றார்.

தியாகி மாடசாமியின் வாரிசு பென்ஷன் தொடர்பான அனைத்து ஆவணங்களும் அத்துறையினருக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்று ஆட்சியர் அலுவலக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். சுதந்திரப் போராட்ட தியாகிகள், வாரிசுகளின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT