ADVERTISEMENT

மக்காச்சோளம் விதைச்சோம்…மனம் புழுங்கி நிக்கிறோம்..!

07:05 PM Nov 29, 2018 | nagendran

தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், புதூர் சுற்றுவட்டாரத்திலும் விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வட்டாரத்திலும் மக்காச்சோளம் பயிர்களை படைப்புழுக்கள் தாக்குவதால், விவசாயிகள் கடும் வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

மக்காச்சோளம் பயிரின் இலைகளை புழுக்கள் அரித்து பச்சையம் இல்லாமல், திட்டுத் திட்டாக வெண் புள்ளிகளாக காட்சியளிக்கின்றன. பயிரின் உட்பகுதிக்குள் படைப்புழுக்கள் சென்று, தட்டை மற்றும் கதிரை சேதப்படுத்துவதால், மகசூல் அடியோடு பாதித்துவிட்டது என வெம்பி நிற்கின்றனர் விவசாயிகள்.

இதுதொடர்பாக பாரதிய கிசான் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரங்கநாயலுவிடம் பேசினோம். “பயிர் முளைவிடும் குருத்து பகுதியை புழுக்கள் அரித்துவிடுவதால், மகசூல் முழுவதும் பாதித்து விடுகிறது. அமெரிக்காவில் இருந்து மான்சான்டோ என்ற நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்த கலப்பின விதைகள் தான் இதற்கு காரணம். இந்திய தயாரிப்பான டாடா நிறுவனத்தின் விதைகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் வினியோகம் செய்த “கிரிப்கோ” நிறுவனத்தின் விதைகளில் இந்த பாதிப்பு இல்லை, எனவே, அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிப்புக்கு என்ன காரணம்? என்பதை கண்டறியவேண்டும். விதைதான் காரணம் என தெரியவந்தால், அந்த நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெற வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசாங்கம் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து பேசிய புதூர் வேளாண்மை உதவி இயக்குனர் முருகப்பனோ " மான்சான்டோ நிறுவனத்தின் கலப்பின விதைகள் தான் இதற்கு காரணம் என்பது நிரூபிக்கபடவில்லை. பயோனியர், என்.சி.எல் போன்ற நிறுவனங்களின் விதைகளை வாங்கி விதைத்த மக்காச் சோள பயிர்களையும் படைப்புழுக்கள் தாக்கி உள்ளன” என்றார். அவரே தொடர்ந்து, “ பயிர் வைத்த 15-25 நாட்களுக்குள் குளோரிபைரிபாஸ், இமாமெக்டின் பென்சோயேட் பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்தால், படைப்புழு தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்றலாம். 45 நாட்களுக்கு மேற்பட்ட பயிர் என்றால், மருந்து தெளிப்பது சற்று கடினம், அப்போது, குருத்து பகுதியில், 4 மணிக்கு மேல் மருந்து தெளிக்கலாம். அப்போது தான், புழுக்கள் வெளியே வரும். மேலும் இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் 15-01-2019-க்குள் பயிர் காப்பீடு செய்தால், காப்பீட்டுத் தொகை பெறுவற்கும் வழிவகை இருக்கிறது’’ என்ற யோசனையையும் அவர் தெரிவித்தார்.

மழையை மட்டும் நம்பி மானாவாரி பயிர்களை மட்டுமே இந்த பகுதியில் சாகுபடி செய்ய முடியும். சென்ற ஆண்டு இந்த பகுதி விவசாயிகள் உளுந்து, பாசிபயறு அதிகம் சாகுபடி செய்திருந்தனர். ஒக்கி புயலுக்கு முன்பு கடுமையான வெயில் அடித்ததால், மஞ்சள் தேமல் நோய் பரவி பாதிப்பு ஏற்பட்டது. மீதம் இருந்த பயிர்களும் ஒக்கி புயலால் சேதமடைந்துவிட்டது. எனவே, இந்த முறை பெரும்பாலான விவசாயிகள் மக்காச்சோளம் பயிருக்கு மாறினர். இதில் செலவு குறைவு ஒருமுறை பூச்சிக் கொல்லி மருந்து தெளித்துவிட்டு, 2 முறை உரம் போட்டால், 90-110 நாளில் மகசூல் எடுத்திடலாம் என நம்பி பயிர் செய்தனர். ஆனால் மொத்தமும் போச்சே என்ற புலம்பி நிற்கின்றனர்.

யார் இந்த மான்சன்டோ ?;

இது அமெரிக்காவை சேர்ந்த வேளாண் வேதியியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப நிறுவனம். 1901-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், 2018-ஜூன் 7 வரை இதே பெயரில் இயங்கியது. பின்னர் பேயர் என்ற நிறுவனத்திற்கு கை மாறிவிட்டது. மான்சாண்டோ முதன் முதலில் 1987-ல் மரபணு மாற்றப்பட்ட விதைகளை அறிமுகம் செய்தது. டி.டி.ட்டி, மற்றும் பி.சி.பி.எஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தயாரித்து சர்ச்சையில் சிக்கியது. 1997-2002 கால கட்டத்தில் அமெரிக்காவில் ரசாயன தொழில் நிறுவனங்களில் முதல் 10 இடங்களில் மான்சான்டோவும் ஒன்று. மான்சாண்டோ மக்காச்சோளம் மட்டுமின்றி, சோளம், பருத்தி, சோயாபீன்ஸ், கோதுமை போன்ற விதைகளையும் சந்தைப்படுத்தி இருக்கிறது. மான்சாண்டோவின் மற்றொரு தயாரிப்பு “ரவுண்ட்அப்” களைக்கொல்லி மருந்து. பயிர்களுக்கு இந்த மருந்தை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாகவும் பரவலாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT