ADVERTISEMENT

மதுரை மேலூர் சிறுமி உயிரிழப்பு சம்பவம்... போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் மீது போலீசார் தடியடி!

09:58 AM Mar 07, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மதுரையில் காணாமல்போன சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுமியின் உடலை நீதிபதியின் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கடந்த மாதம் மதுரை மாவட்டம் மேலூரில் 17 வயது சிறுமி காணாமல் போன நிலையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வந்தனர். நாகூர் ஹனிபா என்ற இளைஞர் சிறுமியை காதலிப்பதாக கூறி அழைத்துச் சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரைத் தேடி வந்தனர். நாகூர் ஹனிபா ஈரோட்டில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வர, போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அதற்கு முன்பே, போலீசார் தம்மை பிடித்து விடுவார்கள் என்ற பயத்திலிருந்த நாகூர் ஹனிபாவும் சிறுமியும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து எலி மருந்து உட்கொள்ள முயன்ற நிலையில் இறுதியில் தற்கொலை முடிவை கைவிட்டு எலி மருந்தை இருவரும் துப்பியுள்ளனர். இதில் சிறுமிக்கும் மட்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை நாகூர் ஹனிபா தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் நாகூர் ஹனிபாவின் தாயார் சிறுமியை அழைத்துச் சென்று அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சிறுமியை அனுமதித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நாகூர் ஹனிபா மற்றும் அவரது தாயாரையும் போலீசார் தேடிவந்த நிலையில் நாகூர் அனிபா, அவரது தாய் மதினா பேகம் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக நாகூர் ஹனிபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகவில்லை என மருத்துவமனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று (06/03/2022) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மதுரை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், ''சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது. இந்த விவகாரத்தில் போக்ஸோ வழக்குப் பதிவாகியுள்ளதால், சிறுமியின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது. சிறுமி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கு கொலை வழக்காகவும் மாற்றப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை குறித்து பெற்றோரிடம் விளக்கத்தை அளித்துள்ளோம்" என்றார்.

இந்நிலையில் சிறுமியின் உறவினர்கள் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். சிறுமியின் உடலை நீதிபதியின் முன்னிலையில் உடற்கூறாய்வு செய்ய வேண்டும். உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்யவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் அங்கிருந்து கலைந்துசெல்ல மறுத்ததால் அங்கு போலீசார் தடியடி நடத்தும் சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT