ADVERTISEMENT

 ‘எவனையும் செய்வோம்!’ -மதுரையில் வன்முறை பேனர்!

02:48 PM Jul 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சினிமாவில் கொடூரமான வன்முறைக் காட்சிகளோ, கொடுஞ்செயல் புரியத் தூண்டும் விதமான வசனங்களோ இடம்பெற்றால், ‘சென்சார்’ செய்துவிட முடியும். நிஜத்திலோ, சினிமாவில் கத்தரிக்கு இரையான காட்சிகளைக் காட்டிலும் படுமோசமான காரியங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த விவகாரத்தை இங்கே ஏன் குறிப்பிட வேண்டியதிருக்கிறது என்றால், மதுரை ரயில்நிலைய மேற்கு வாயில் அருகில் உள்ள ரயில்வே திருமண மண்டபத்தில், பலரும் பார்க்கும் விதத்தில், நெருடலான வாசகங்களுடன், கெத்து காட்டும் இளைஞர்கள் சிலர் வைத்திருந்த மெகா சைஸ் பிளக்ஸ் பேனர்தான்.

ADVERTISEMENT

நட்பு குறித்து வள்ளுவரும்கூட ‘உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு..’ என்று குறள் இயற்றியிருக்கிறார். பலர் முன்னிலையில் ஆடை நழுவும்போது, உடனே சென்று உதவும் கைபோல, நண்பனுக்குத் துன்பம் வரும்போது உடனே சென்று போக்குவதே நட்பு என்பதே இக்குறளின் பொருளாகும். பேனரில் உள்ள இளைஞர்களோ, ‘நட்புக்காக எதையும் செய்வோம்.. அதே நண்பனுக்கு ஒண்ணுன்னா எவனையும் செய்வோம்..’ என, வார்த்தைகளில் அளவுக்கதிகமாக சீறலை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதிலும், ‘எவனையும் செய்வோம்’ என்ற வார்த்தையில் வன்முறை தாராளமாக கொப்பளிக்கிறது.

‘தமிழன்டா.. நண்பேன்டா..’ என்று இருசக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் ஒருபுறம் இருக்க.. வாள், கேடயம், வேல்க்கம்பு போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி, ‘வீரன்டா’ என்று ஜாதியைக் குறிப்பிட்டு, பிறரை வம்புக்கு இழுப்பவர்களும் நம்மிடையேதான் இருக்கிறார்கள். இதுபோன்ற ஸ்டிக்கர் பேர்வழிகளைக் கண்டுகொள்ளாததன் விளைவே, ‘எவனையும் செய்வோம்’ என்று பேனர் வைக்கும் நிலைக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. அவர்களின் வன்முறை சிந்தனைக்கு பிளக்ஸ் பேனர் அச்சிட்ட நிறுவனமும் துணைபோயிருப்பதுதான் கொடுமை!

அந்த இளைஞர்கள் எச்சரிக்கப்பட வேண்டியவர்கள் என்பதால், தகுந்த ஆலோசனை வழங்கிட வேண்டுமென்று, வாட்ஸ்-ஆப் மூலம் மதுரை மாநகர் குற்றத்தடுப்பு பிரிவின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT