ADVERTISEMENT

வரத்து அதிகரிப்பு; ஈரோட்டில் குறைந்த தக்காளி விலை

08:03 PM Aug 17, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தாளவாடி, தாராபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியிலிருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வழக்கமாக சாதாரண நாட்களில் 7,000 தக்காளிப் பெட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 20 வரை விற்பனையானது. ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் தக்காளி வரத்து குறையத் தொடங்கியது. இதனால் தக்காளி விலை உயரத் தொடங்கியது.

சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐக் கடந்தது. ஈரோட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனையானது. ஈரோட்டில் 600 முதல் 800 பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள், பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியதால், விலையும் சரியத் தொடங்கியது. ஒரு கிலோ 160-க்கு விற்கப்பட்ட தக்காளி படிப்படியாக குறைந்து ரூ.100-க்கு விற்பனையானது.

கடந்த ஒரு வாரமாக மேலும் விலை குறைந்து ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகி வந்தது. இந்நிலையில், இன்று ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கிருஷ்ணகிரி, தாராபுரம், தாளவாடி போன்ற பகுதிகளிலிருந்து 5,000 தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகரிப்பால் இன்று தக்காளி விலை மேலும் குறைந்தது. இன்று ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ. 40- க்கு விற்பனையானது. சுமாரான தக்காளி ரூ.50-க்கு விற்பனையானது. இனி வரக்கூடிய நாட்களில் வரத்து மேலும் அதிகரித்து தக்காளி விலை மேலும் குறையும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT