ADVERTISEMENT

‘பாரம்பரிய சிலைகளை மீட்பதில் தமிழக அரசுக்கு விருப்பமில்லை!’- அறிக்கையில் பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!

04:03 AM Nov 26, 2019 | santhoshb@nakk…

காணாமல் போன பாரம்பரிய சிலைகளை மீட்பதில், அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்றும் சிலை மீட்பு விசாரணைகளில் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் பொன்மாணிக்கவேல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

ADVERTISEMENT

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பொன் மாணிக்கவேல் கடந்த ஓராண்டில் சிலைக் கடத்தல் வழக்குகளில் மேற்கொண்ட பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தன்னை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்த போதே அந்த உத்தரவை எதிர்த்தும், சிலைக் கடத்தல் சிறப்பு பிரிவில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரியும் 66 காவல்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் 202 காவல்துறையினர் தன் தலைமையில் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், 51காவல் அதிகாரிகளும், 15 காவலர்களும் தங்களை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

ADVERTISEMENT

இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், புதிதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்புக் குழுவிற்கு 85 அதிகாரிகள், 108 காவலர்கள் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணைகளில், ஏடிஜிபியின் தலையீடு மற்றும் போதிய ஒத்துழைப்பு வழங்காததை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு தொடரப்பட்டது. இந்நிலையில், தன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவானது, 116 வழக்குகளில் தகவல்களைத் திரட்டி, அதில் 59 வழக்குகளில் 110 சிலைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தது.

சிலைக்கடத்தல் தொடர்பாக திரட்டிய விசாரணைத் தகவல்கள் அடங்கிய குறுந்தகடுகளைத் தொலைத்த 31 வழக்குகளில், கடமை தவறிய காவல்துறையினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் புதிய எஸ்.பியாக நியமிக்கப்பட்ட ராஜேஸ்வரி, தனக்கு உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவுகள் தேவையில்லை, டிஜிபியின் உத்தரவை மட்டுமே தான் பின்பற்றி சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிப்பதாக, தங்களுடைய விசாரணையில் குறுக்கிட்டார்.



தங்களுடைய விசாரணைக்கு ஒத்துழைத்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இத்தகைய பிரச்சனைகளுக்கு மத்தியில் சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு அதிகாரியாக தன்னை நியமித்து ஒராண்டில் சிலைக்கடத்தல் தொடர்பாக 3 வழக்குகளில் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். திருடப்பட்ட 12 சிலைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சிலைகளில் தொல்லியல் துறை ஒத்துழைப்போடு 5 ஆயிரத்து 198 சிலைகள் பழமையானவை என கண்டறியப்பட்டுள்ளன. சாட்சிகள் உதவியால் 4 வழக்குகளில் சிலைத் திருட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 56 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டிற்குச் சொந்தமான 6 சிலைகள் சிங்கப்பூரில் இருந்தும், அமெரிக்காவில் இருந்து 9 சிலைகளும் மீட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. பாரம்பரிய சிலைகள் மீட்பு மற்றும் அதனைச் சோதனையிடுவதில் தமிழக அரசு போதிய விருப்பம் காட்டுவதில்லை. தங்களின் விசாரணைக்கான வாகன செலவு, வெளிநாடு சென்று விசாரிப்பதற்கான போக்குவரத்து செலவுகளை வழங்க கோரி கடிதம் அளித்தும் இதுவரை அரசு தரப்பில் பதில் அளிப்பதில்லை‘ என பொன்மாணிக்கவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT