ADVERTISEMENT

''ஏதாவது கிறுக்கனா இருந்தா பாரு''- வாய்ஸ் நோட்டால் சிக்கிய மோசடி பெண்   

11:37 AM Sep 29, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஒரு லட்சம் ரூபாய் புரோக்கர் கமிஷன் கொடுத்து திருமணம் செய்துகொண்ட இளைஞர் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டது தெரியவந்து மோசடி மனைவி, புரோக்கர் என பலர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோபிச்செட்டிபாளையத்தில் நிகழ்ந்துள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசப்பகவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் புரோக்கர் மூலம் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். அதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தனக்கு தெரிந்த சரிதா என்ற ஏழை பெண் இருப்பதாக அந்த இளைஞரிடம் தெரிவித்துள்ளார். இளைஞரும் அவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கி அதில் 1,20,000 ரூபாயை புரோக்கராக செயல்பட்ட விஜயலட்சுமிக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை திருமணத்திற்கு செலவு செய்துள்ளார்.

மேலும் அந்த பெண் குறித்து இளைஞர் விசாரித்ததில் தனக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும், அவர் கேரளாவில் வசித்து வருவதாகவும், தான் ஆதரவற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி ஈரோட்டில் பேப்பர் கோன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் சரிதா கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் 22 ஆம் தேதி இளைஞரின் சொந்த ஊரான தாசப்பகவுண்டன்புதூரில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் உறவினர்கள் முன்னிலையில் சரிதாவை அந்த இளைஞர் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி ஒரு சில நாட்களில் மனைவி சரிதாவின் செல்போனை எதேச்சையாக எடுத்து பார்த்துள்ளார் அந்த இளைஞர். அப்பொழுது பெரியம்மா என்ற பெயரில் போனில் சேவ் செய்யப்பட்டிருந்த விஜயலட்சுமிக்கு வாட்ஸப்பில் சரிதா அனுப்பியிருந்த வாய்ஸ் நோட்டை கேட்டு அதிர்ந்து போயுள்ளார் அந்த இளைஞர்.

அந்த வாய்ஸ் நோட் ஆடியோவில், ''அடுத்தவாரம் நீயா அழைச்சுட்டு போறமாதிரி வா... போயிட்டு வேற ஏதாவது கனெக்சன் இருக்குதா பாரு. கிறுக்கனா இருக்கனும். போயிட்டு இங்க ஒரு வாரத்துல வரமாதிரி. வேற ஏதாவது ஆளு இருந்தா பாரு. ஆனா இது மாதிரி விவரமா வேண்டாம்.. சும்மா வயசு எச்சா இருக்கிற மாதிரி பாரு. ரெண்டு நாள்ல எஸ்கேப் ஆகுற மாதிரி ஆளா பாரு. திரும்ப ஓடி வந்துருவேன். நா ஓடிப்போயிட்டேன்னா இந்த பையன் எதுனா பண்ணிக்கும். அதுவேற பயமா இருக்குது'' என பேசியுள்ளார். இதனைக்கேட்டு மனமுடைந்த அந்த இளைஞர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதுதொடர்பாக நண்பர்களிடம் அந்த இளைஞர் தெரிவித்த நிலையில் நண்பர்கள் ஆலோசனைப்படி தன் நண்பனுக்கும் திருமணம் செய்ய பெண் வேண்டும் என சரிதாவிடம் அந்த இளைஞர் கேட்டுள்ளார். அவரும் பெரியம்மா விஜயலட்சுமியிடம் தெரிவிக்க, விஜயலட்சுமி தன்னிடம் பெண் இருப்பதாககூறி 80 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்டு பெண்ணுடன் தாசப்பகவுண்டன்புதூர் வந்துள்ளார். அப்பொழுது சுற்றிவளைத்து பிடித்த அந்த இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அந்த மோசடி கும்பலை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்தனர். மூன்று பேரையும் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT