ADVERTISEMENT

“கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம்” - நடிகர் ரஜினிகாந்த்!

11:47 PM Feb 26, 2024 | prabukumar@nak…

ADVERTISEMENT

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110 ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞரின் நினைவிடம் மிகவும் அருமை. ரொம்ப அற்புதம். இதனை கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT