ADVERTISEMENT

ஈழமே இலக்கு என உறுதியேற்போம்!- தொல்.திருமாவளவன்

05:26 PM May 18, 2018 | vasanthbalakrishnan

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளான இன்று பல்வேறு தமிழக அரசியல்கட்சி தலைவர்கள் ஈழப்போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் செலுத்திவருகின்றனர். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

போர்க்களத்தில் வெற்றி ஒன்றே இலக்கு. மனிதநேயம், ஈவிரக்கம் போன்றவற்றிற்கு இடமில்லை. அங்கே பயங்கரவாத ஒடுக்குமுறைகளே வெற்றிக்கான வழிமுறைகளாகின்றன. ஆதிக்கவெறியே கொடூரங்களாகவும் குரூரங்களாகவும் அரங்கேறுகின்றன. அத்தகைய ஆதிக்கவெறிக்குக் கொட்டும் குருதியும் குவியும் பிணங்களுமே தீனியாகின்றன.

ADVERTISEMENT

அந்தவகையில்தான் இலட்சக்கணக்கான நம் ஈழச்சொந்தங்கள் சிங்கள இனவெறி அரசு மற்றும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் மேலாதிக்க வெறிக்கு இரையாயினர். அந்த அரசுகள் அல்லது ஆட்சியாளர்கள், விடுதலைப்புலிகளை மட்டுமின்றி அப்பாவிப் பொதுமக்களையும் கொன்று குவித்து இனஅழிப்புக் கொடூரத்தை நடத்தி முடித்துத் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டி, “போர் முடிவுக்கு வந்தது” என அறிவிப்புச் செய்து கொக்கரித்தனர். அவ்வாறு அவர்கள் கொக்கரித்தநாள் தான் 2009, மே18 ஆகும்.

ஒரே நாட்டுக் குடிமக்களை அழித்தொழித்தக் கொடூரத்தைப் ‘போர்’ என்று சிங்கள இனவெறி அரசு அறிவித்தது வெட்கக் கேடாகும். அது ஒரு அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையாகும். அது இன அழித்தொழிப்புக் கொடூரமாகும்.

சிங்கள இனவெறி அரசு மட்டுமின்றி, இந்தியா, அமெரிக்கா உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டுசேர்ந்து ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய அந்தக் கொடூரத்தை அரங்கேற்றி ஆளும்கும்பல் எக்காளமிட்ட நாள் தான் மே18 ஆகும்.

தமிழினத்தின் வரலாற்றில் மிக ஆழமான வடுவாகப் பதிந்த கொடூரமான இந்நாளை நினைவுகூர்ந்து, அரசப்பயங்கரவாதத்தை எதிர்க்கவும் ‘ஈழமே நமது இலக்கு; அதனை வென்றெடுப்பதே நமது குறிக்கோள்’ என செயலாற்றவும் உறுதியேற்போம். அத்துடன், ஆதிக்கவெறி ஒடுக்குமுறையால் படுகொலையானோர் யாவருக்கும் இந்நாளில் செம்மாந்த வீரவணக்கம் செலுத்துவோம் எனக்கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT