ADVERTISEMENT

“காலண்டரை பார்த்து அமைச்சர் தெரிந்துகொள்ளட்டும்..” - ஓ.பி.எஸ் பதில்!

10:41 AM Nov 08, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இருக்கும் பண்ணை வீட்டில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.எஸ். திடீரென பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் அவர், “முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக நான் விடுத்த அறிக்கைக்குப் பதில் அளித்துள்ள நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நான் முல்லைப்பெரியாறு அணைக்குச் சென்றுவந்த செய்திகளைக் குறிப்பிட முடியுமா? என்றும், 'முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடும்போது அணையின் பின்புறம் இருந்துதான் தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், அணைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை என்றும், '2006ஆம் ஆண்டு கேரள அரசின் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்குதான் போட்டார்கள். நம்பர் வாங்கவில்லை என்றும், அவருடைய தலைவர்தான் வழக்கை முடித்தது என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி எனது அறிக்கையில் நான் குறிப்பிட்ட சிலவற்றில் உப்புசப்பில்லை என்று விட்டுவிடுவதாகவும் கூறுகிறார். இதன்மூலம் திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் படகில் முல்லைப் பெரியாறு அணை பகுதிக்குச் சென்றிருக்கிறேன். பேபி அணை உட்பட அனைத்தையும் ஆய்வு செய்த அனுபவம் எனக்கு உண்டு. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடும் பாக்கியத்தை பெற்றிருக்கிறேன் என்றும் இந்த அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் வசித்த இடத்திற்கு சென்று இல்லத்தின் வடிவத்தை மாற்றாமல் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அதன்பேரில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன என்றும் எனது அறிக்கையில் தெரிவித்து இருந்தேன். அதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளிலும் 2011, 2012 மற்றும் 2015 முதல் 2021 வரை மாவட்ட அமைச்சர் என்ற முறையில் அணை பகுதிக்கு சென்றிருக்கிறேன். மொத்தத்தில் 14 முறை சென்ற அனுபவம் எனக்கு உண்டு என்றும் தெரிவித்தேன்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை மட்டும் திறந்துவிட வேண்டும் என்றால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு செல்ல தேவையில்லை. ஆனால், நான் என்னுடைய அறிக்கையில் படகில் சென்று முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு அங்கிருந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் வசித்த இடத்தை பராமரிக்க உத்தரவு பிறப்பித்தேன் என்றும் தெரிவித்தபோது அதை மறைத்து அணை நீரை நான் தொட்டுவிட்டு வந்திருப்பதாக அமைச்சர் கூறியிருக்கிறார்.

முதலில் நான் எதையுமே பார்க்கவில்லை என்று சொன்ன அமைச்சர், இப்போது நான் நீரை மட்டும் தொட்டுவிட்டு வந்ததாக பேசியிருக்கிறார். நான் அணையின் நீரை மட்டும் தொடவில்லை முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, சிற்றணை, அணையைக் கட்டிய பென்னி குவிக் வசித்த இடம் என அனைத்தையும் பலமுறை தொட்டுவிட்டு வந்தவன் என்பதை அமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அவர் கூறுகையில் நான் முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு சென்றுவந்த தேதிகளை குறிப்பிட்டு சொல்ல முடியுமா என்றும், பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும் காலண்டரில் பதிவாகி இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார். பொதுவாக விளம்பரத்திற்காக சொல்பவர்கள்தான் இதையெல்லாம் குறித்து வைத்திருப்பார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கத்துடன் செல்பவர்கள் செய்தியை எல்லாம் குறித்துக்கொள்ள மாட்டார்கள். இப்போது ஆட்சியில் இருப்பது திமுக, எனவே காலண்டரில் இருக்கிறதா? என்பதை அவர்தான் பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதும் உண்மையை சொல்வார்களா என்பது சந்தேகம்தான். அதுபோல் அப்போது பொதுப்பணித் துறையினரால் பணியாற்றிய அதிகாரிகள் என்னுடன் வந்தனர். அவர்கள் பணியில் இருந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

தன்னுடைய அறிக்கையை உச்ச நீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்தாமல் இருக்கும் வகையில் கேரள அரசு ஒரு சட்டத்தை கொண்டுவந்தபோது ஜெயலலிதா அதனை எதிர்த்து வழக்குதான் போட்டார்கள் என்றும் அந்த வழக்குக்கு நம்பர் பெறவில்லை என்றும் இவருடைய தலைவர் நம்பர் வாங்கி வழக்கு முடித்து வென்றார்கள் என்றும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு 27-02-2006 அன்று வெளிவந்த பின் அந்தத் தீர்ப்பிற்கு எதிராக 18-3-2006 அன்று கேரள அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இருந்தபோதிலும் கேரள அரசின் சட்ட திருத்தத்தை எதிர்த்து ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்திலேயே வழக்கு தொடுத்தார். தேர்தல் முடிந்து 2006ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது மத்தியில் திமுக அங்கம் வகித்த ஆட்சிதான் நடைபெற்றது. ஆனால், 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தவரை முல்லைப் பெரியாறு அணை வழக்கில் ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

2011ஆம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன், முல்லைப் பெரியாறு வழக்கை துரிதப்படுத்தி சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து பிரசித்திபெற்ற வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக செய்து மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தியதையடுத்து 7-5-2014 அன்று உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பினை வழங்கியது. அத்தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவற்றை பழுது பார்க்கப்பட்டு பலப்படுத்தப்பட்ட பின்பு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக்கொள்ளலாம் என்றும் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவிதமான இடையூறும் அளிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 27-2-2006 அன்று ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு 2006 முதல் 2011 வரையில் அப்போது ஆட்சியிலிருந்த திமுக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜெயலலிதா 2011ம் ஆண்டு மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சட்டப்போராட்டம் நடத்தி 2006ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஆணையைப் பெற்றுதந்தார் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் காட்டியவர் ஜெயலலிதா.

உண்மை நிலை இவ்வாறு இருக்க, அவருடைய தலைவர்தான் வழக்கு முடித்து வென்றார் என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. மேலும் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 6.50கோடி ரூபாய்க்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு, ஜல்லி, மணல், கம்பி போன்ற கட்டுமானப் பொருட்கள் வல்லக்கடவு வழியாக அணையின் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இருப்பினும் முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணைக்குக் கீழ் உள்ள மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி வழங்காத நிலையில் கால தாமதம் ஏற்பட்டதன் காரணமாக ஒப்பந்ததாரர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அகற்றப்பட்டன.

தற்போது 15 மரங்களை வெட்ட கேரள வனத்துறை அனுமதி அளித்துள்ளது என்ற தகவல் மிகவும் மகிழ்ச்சிக்குரியது. பழுதுபார்க்கும் பணிகள் முடிந்தவுடன் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை தேக்கிக்கொள்ளலாம் என்று ஜெயலலிதா பெற்றுத்தந்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சியிடம் உள்ள செல்வாக்கை நெருக்கத்தைப் பயன்படுத்தி கேரள அரசின் அனுமதியைப் பெற்று பழுதுபார்க்கும் பணிகளை விரைந்து மேற்கொண்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT