ADVERTISEMENT

'ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம்'-அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

06:40 PM May 30, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆன்லைன் சூதாட்டம், ஆன்லைன் ரம்மி போன்ற நிகழ்வுகளால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை காவல்துறை அளித்து வருகிறது. அண்மையில் 'பிட்காயின் மோசடி' குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதேபோல் நேற்று அவர் வெளியிட்ட வீடியோவில், 'ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் இணையதளத்தில் மிகப்பெரிய மோசடி நடந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் ரம்மி விளையாட வைத்து உங்களிடம் முதலில் அவர்களே அதிக பணத்தை கொடுத்து, அதன்பிறகு உங்களை முதலீடு செய்ய வைத்து பின்பு ஏமாற்றுவார்கள். முதலில் நீங்கள் விளையாடும் பொழுது நீங்கள் ஜெயித்தது போன்று பரிசு கிடைக்கும். அதன்பிறகு பெரிய தொகையைக் கொடுத்து விளையாடும்போது இன்னொரு முறை விளையாடினால் அதிக பணம் வரும் என்று திரும்ப திரும்ப விளையாடுவீர்கள். சில நேரத்தில் பணம் வருவது போன்று தெரியும். அதை நம்பி திரும்ப நீங்கள் இன்னும் முதலீடு செய்வீர்கள். ஆனால் முழுவதுமாக பணம் தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கும். இருக்கிற பணம், நகை விற்று அதன் மூலம் வரும் பணம் என பல லட்ச ரூபாயை இழந்த பிறகு பணமெல்லாம் போச்சே என நினைக்க வைக்கும்.

இதுபோன்ற விளம்பரங்களில் சினிமா நடிகர்கள் எல்லாம் கூட வருகிறார்கள் என்பதற்காக எல்லாம் ஆன்லைன் ரம்மி விளையாட போகாதீர்கள். இந்த காணொளியை கண்ட பிறகும் நீங்கள் விளையாட போனீர்கள் என்றால் மிகப்பெரிய தவறை செய்கிறீர்கள், மிகப்பெரிய பேராசை உங்களிடம் இருக்கிறது என்று அர்த்தம்' எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடைச் செய்வதை விடுத்து தமிழக டிஜிபி ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள் என அறிவுரை மட்டும் கூறிவருகிறார் எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பான விவாதங்கள் கிளம்பிய நிலையில் 'ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசு சார்பாக புது சட்டம் விரைவில் இயற்றப்படும் என தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை வலுவாக உருவாக்கவில்லை. பொறுப்பை உணர்ந்து பொய் குற்றச்சாட்டு கூறுவதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT