ADVERTISEMENT

“சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்” - கமல்ஹாசன்

09:53 PM Aug 25, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. விரிவுபடுத்தும் இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார்.

மேலும் இந்த திட்டத்திற்கு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யக் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், “இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும். இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT