Chief Minister in Field Survey; The Chief Minister made two important announcements

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் கூட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (18.10.2023) கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “இந்த நல்ல தருணத்தில் நான் இரண்டு முக்கிய அறிவிப்புகளை இந்தக் கூட்டத்தின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன். முதலாவதாக, தென் சென்னைப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, திமுக அரசு பதவி ஏற்றவுடன் இராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பச் சாலையில் உள்ள பெருங்குடி கட்டணச் சாவடியில் சாலைப் பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்வது கைவிடப்பட்டது. இதனால் இப்பகுதி வழியாக செல்வோரும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவோரும் பெரும் பயனடைந்தனர்.

Advertisment

தற்போது இந்த சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் பலபகுதிகள் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதே சாலையில் நாவலூரில் உள்ள கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிக்கக் கூடாது, என்ற இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று, நாளை முதல் நாவலூர் கட்டண சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தி வைக்கப்படும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரண்டாவதாக, சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சிகளை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. அண்மையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, இந்த குடியிருப்புகளின் பொது விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள் போன்ற பொதுப் பயன்பாட்டு பணிகளுக்கான மின்கட்டணங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான கட்டண முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என்று பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்துள்ள அடிப்படையில், இதனை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கான புதிய சலுகைக் கட்டணமுறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ், பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறையும். இதனால் மாநிலம் எங்கும் உள்ள சிறு குடியிருப்புகளில் வசிக்கும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்” என தெரிவித்தார்.

Chief Minister in Field Survey; The Chief Minister made two important announcements

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, அரசு துறைச் செயலாளர்கள், துறை தலைவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர. ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபு சங்கர், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.