ADVERTISEMENT

திருவண்ணாமலையில் பிரபலமாகிவரும் குபேர கிரிவலம்! 

10:36 AM Nov 05, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்மணி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தம். லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டுமல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என பக்தர்கள் வலம் வருகின்றனர். தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வருகிறார்கள்.

ADVERTISEMENT

இந்நிலையில் திருவண்ணாமலையில் திடீரென குபேர கிரிவலம் என்பது பிரபலமாகிவருகிறது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் என்கிற பெயரில் 8 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு லிங்கமென பக்தர்கள் வணங்குவார்கள். ஆனால் குபேர லிங்கத்தை மட்டும் அனைவரும் வணங்குவார்கள். அதற்கு காரணம், குபேர லிங்கத்தை வணங்கினால் வீட்டில், தொழிலில் செல்வம் பெருகும் என்கிற நம்பிக்கையே காரணம். அதனால் எப்போதும் அந்த லிங்க கோயிலில் கூட்டமிருக்கும்.

இந்நிலையில் தான் குபேர கிரிவலம் வந்தால் குபேரனாகலாம் என்கிற பிரச்சாரத்தை ஆன்மீக அமைப்புகள் சில தொடங்கியுள்ளன. அவர்கள் கூறுவது, ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார். வந்து அவர் திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 -வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும் இருக்கும்.

இந்த ஆண்டின் சித்திரை சிவராத்திரி வரும் டிசம்பர் 5ந்தேதி வருகிறது. அன்று குபேரன் விண்ணில் இருந்து மண்ணுக்கு வருகிறார். அவருடன் சேர்ந்து குபேர லிங்கத்தை வணங்கி அவருடன் சேர்ந்து கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும்.

இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம், மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும். இரவு 7 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும். கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும் என பிரச்சாரம் செய்கின்றனர்.

வாட்ஸ்அப், முகநூல்களில் முன்பு பரவிய அந்த தகவல் தற்போது செய்தித்தாள் செய்தி வரை வந்துவிட்டது. திருவண்ணாமலையில் கடந்த 3, 4 ஆண்டுகளாக தான் இப்படியொரு கிரிவலத்தை தொடங்கி நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குபேர லிங்கம் அருகே குவிந்தனர். இந்த ஆண்டு எத்தனை லட்சம் பேரோ என இப்போதே நொந்துப்போய்வுள்ளனர் போலிஸார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT