ADVERTISEMENT

சித்திரை திருவிழா: கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திரண்ட திருநங்கைகள்

09:52 AM May 03, 2018 | rajavel

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 17-ந் தேதி இந்த விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் தாலிகட்டி கொள்ளும் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் திருநங்கைகள், கூத்தாண்டவரை தங்கள் கணவராக ஏற்றுக்கொண்டு கோவில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டனர். தொடர்ந்து அரவாணுக்கு மனைவிகள் ஆகிவிட்டோம் என்கிற மகிழ்ச்சியில் இரவு முழுவதும் கூட்டம், கூட்டமாக கும்மியடித்து ஆடிப்பாடி அவர்கள் மகிழ்ந்தனர்.

ADVERTISEMENT

விழாவில் 16-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. பின்னர் பெரியசெவலை சாலையில் உள்ள அழிகளம் நோக்கி தேர் புறப்பட்டது. அதுவரை புதுமண பெண்கள் போல் தங்களை ஆடை, அணிகலன்களால் அலங்கரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்த திருநங்கைகள் சோகமயமாகினர். பலர் ஒப்பாரி வைத்து கதறி அழுத படியே தேரை பின்தொடர்ந்து சென்றார்கள்.

மதியம் 1 மணியளவில் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலை தேர் சென்றடைந்தது. அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்து, நெற்றியில் உள்ள குங்குமப்பொட்டை அழித்தனர். தொடர்ந்து பூசாரிகள், திருநங்கைகள் கையிலிருக்கும் வளையல்களை உடைத்து, கழுத்தில் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்தார்கள்.

அதன் பிறகு திருநங்கைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று குளித்து தலை மூழ்கி வெள்ளை சேலை அணிந்து விதவைக் கோலம் பூண்டு சோகமாக அவரவர் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.

18-ம் நாள் நிகழ்ச்சியாக நாளை தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளோடு இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT