ADVERTISEMENT

கிரண்பேடியை கண்டித்து சிறைநிரப்பும்  போராட்டம் - நாராயணசாமி தீவிரம்

09:32 AM Feb 16, 2019 | sundarapandiyan

ADVERTISEMENT

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மத்திய அரசின் பாரபட்சம் ஆகியவற்றை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தி.மு.க உள்ளிட்ட தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் ஆளுநர் மாளிகை முன்பாக நேற்று மூன்றாவது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும், காரைக்காலிலும் காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் இரவு, பகலாக ஆளுநர் மாளிகை முன்பாக சாலையோரத்திலேயே படுத்துறங்கி, அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆளுநர் மாளிகை சுற்றி துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே 14-ஆம் தேதி காலை டெல்லி சென்ற கிரண்பேடி அங்கு பல்வேரு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு 21-ஆம் தேதி தான் புதுச்சேரி வருகிறார்.

ADVERTISEMENT

அதேசமயம் 'ஹெல்மெட் விஷயத்தில், அரசியல் செய்ய வேண்டாம் என முதல்வர் நாராயணசாமிக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதேபோல் சபாநாயகர் வைத்திலிங்கம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் , ‘ மாநில முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது மாநில நிர்வாகியாக இருக்கும் கவர்னர் டில்லி புறப்பட்டுச் சென்றுள்ளது எனக்கு அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்னையை தீர்த்து வைக்க மத்திய அரசு உடனடியாக உள்துறை அதிகாரியை அனுப்பி நேரடியாக பிரச்னைகளை ஆராய்ந்து தீர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில், புதுச்சேரி மாநிலத்திற்கு திறம்பட செயல்படக்கூடிய கவர்னரை நியமிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ தலைமையிலான பா.ஜ.கவினர் டி.ஜி.பி. சுந்தரி நந்தாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் ‘சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் போலீசாரின் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தும் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை கைது செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்திற்கு சென்று, ‘முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, கலைத்தனர்.

அதேசமயம் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் நாராயணசாமி, “ 13 ம் தேதி தர்ணா துவங்கியது. 21ம் தேதி பேச்சுவார்த்தை வைத்து கொள்ளலாம் என கிரண்பேடி கடிதம் கொடுத்திருந்தார். தனியார் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து டெல்லி சென்ற அவருக்கு மக்கள் நலன் மீது அக்கறை இல்லை. கூட்டணி கட்சியினர் முடிவின் படி அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆளுநர் மாளிகை முன் தர்ணாவை தொடர்வது, சனிக்கிழமை மாலை 12 மையங்களில் கிரண்பேடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது, 17-ஆம் தேதி ஞாயிற்றுகிழமை 30 தொகுதிகளிலும் கறுப்பு கொடி ஏற்றுவது, 18 -ஆம் தேதி கிரண்பேடியை கண்டித்து குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம், 19-ஆம் தேதி மாசிமக திருவிழாவையொட்டி போராட்டம் கிடையாது. 20 -ஆம் தேதி 12 மையங்களில் சிறைநிரப்பும் போராட்டம், 21ம் தேதி மாபெரும் உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றார். மேலும் அவர்,” மத்தியில் நமக்கு எதிரான அரசு நடக்கிறது. போராட்டங்கள் அமைதியாக நடக்க வேண்டும். ஆளுநர் மாளிகை முன் நடக்கும் தர்ணாவிற்கு வருவதை கட்சியினர் தவிர்க்கவும். பொது மக்கள் நலனும் ஆதரவும் தான் முக்கியம்” எனவும் கூறியுள்ளார்.

இதன் மூலம் கிரண்பேடி புதுச்சேரி வந்து பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை போராட்டங்களை தொடர முதலமைச்சர் நாராயணசாமி முடிவெடுத்துள்ளது தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT