ADVERTISEMENT

சிலம்பக் கலையை கற்றுக்கொடுக்கும் +2 மாணவன்... 

05:26 PM Jun 26, 2020 | rajavel

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பெரும் அச்சத்தை மக்களுக்கு கொடுத்து வருகிறது. இது ஒரு பக்கம் என்றால் அதேநேரத்தில் கிராமங்களில் விவசாய வேலைகள் தவிர மற்ற நேரங்களில் அத்தியாவசிய தேவைக்காககவும், பொழுதுபோக்கவும் நகரங்களுக்கு சென்று வருவார்கள். ஆனால் இப்போது கரோனா காரணமாக தமிழக கிராமங்களில் இருந்து அருகில் உள்ள நகரப் பகுதிகளுக்கு செல்வது குறைந்துள்ளது.

ADVERTISEMENT

இப்படி கிராமப்புறங்களில் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கக்கூடாது. ஓய்வு நேரத்தை கரோனா அதிகப்படுத்தி கொடுத்துள்ளது, இதை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்று பலர் பலவிதமான பணிகளை செய்து வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியனூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் திருமலை ஒரு வித்தியாசமான முறையில், ஊரில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய பாதுகாப்பு தரக்கூடிய கலையைக் கற்றுத் தருகிறார். தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்ப கலையை நன்கு கற்றுத் தேர்ந்தவர் திருமலை. இந்த கலையை பல்வேறு கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மக்களை கவரும் வகையில் நடத்திக் காட்டியவர் தற்போது கரோனா காரணமாக கிராம மக்களுக்கு அதிக நேரம் ஓய்வு கிடைத்துள்ளது, இந்த நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று உணர்ந்த திருமலை தனது ஊரில் உள்ள சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு சிலம்பக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்.

தினசரி காலை, மாலை, இரவு நேரங்களிலும் இவரது சிலம்பப் பயிற்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதை கற்றுக்கொள்வதற்கு ஆர்வமுடன் நிறைய பேர் வருகிறார்கள். அனைவருக்கும் பாகுபாடில்லாமல் ஊதியம் எதுவும் வாங்காமல் இலவசமாகவே கற்றுக்கொடுத்து வருகிறார் திருமலை.

இதுகுறித்து அவரிடம் பயிற்சிபெறும் இளைஞர்களிடம் கேட்டபோது, “தமிழரின் பண்பாட்டு கலை சிலம்பம், இது ஒரு தற்காப்பு கலையும் கூட. திருடர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு மனிதரும் சிலம்பத்தை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் இதே கலையை எங்கள் ஊரில் உள்ள பெண்களுக்கும் கற்றுத் தருமாறு எங்கள் குரு திருமலையிடம் கூறியுள்ளோம். ஏனென்றால் தற்போது பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அதனால் பெண்கள் பல்வேறு விதங்களில் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எனவே சிலம்ப கலையை கற்று வைத்திருந்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் அதைப் பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே சிலம்பகலை தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் பெண்கள் சிறுவர்கள் அனைவரும் ஆண், பெண் பாகுபாடின்றி கற்றுக்கொள்ள வேண்டியகலை என்றனர். ஆர்வமுடன் சிலம்பம் கற்றுக்கொள்ள முன்வரும் பெண்களுக்கும் கற்றுத்தர திருமலையும் சம்மதித்துள்ளார்.

இளைஞர் திருமலை பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். ஏற்கனவே ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சென்னையில் உள்ள ஒரு குருகுலப் பள்ளியில் தங்கி படித்துள்ளார். அந்தப் பள்ளி விடுதி காப்பாளர் திருமலை சிலம்பப் பயிற்சி பெற்றிருப்பது தெரிந்து, அந்த கலையை அந்த பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கற்றுத் தருமாறு கோரியுள்ளார். அதேபோன்று திருமலையும் கற்றுக் கொடுத்துள்ளார். தற்போது தனது தந்தைக்கு வயதாகி விட்டதால் தனது சொந்த ஊரான கிளியினுருக்கு வந்துள்ளார். இப்போது தமது ஊரில் சிலம்பப் பயிற்சி கற்றுத் தந்து வரும் திருமலை தனது வருமானத்திற்காக திருமணம் போன்ற விசேஷங்களுக்கு சமையல் உதவியாளராக அவ்வப்போது சென்று வருகிறார். தற்போது தனது ஊரிலேயே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்தும் வருகிறார். இவரது நிலையை அறிந்த சிலம்பம் கற்றுக் கொள்ளும் பிள்ளைகளின் பெற்றோர்கள், திருமலைக்கு அவர்களாகவே முன்வந்து உதவி செய்து வருகிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT