ADVERTISEMENT

கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு! 

05:02 PM Oct 10, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் அந்தப் பகுதியில் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி ரதி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இதில் மூன்றாவது குழந்தையாக கைக்குழந்தை ஸ்ரீஹரிஸ் (1 1/2 ) உள்ளார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது குழந்தையுடன் கணவன் மற்றும் மனைவி இருவரும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது, அந்தக் கோவிலில் தங்கி இருந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இவர்களுடன் நட்பாகப் பேசி வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், அந்த பெண் இவர்களுடன் அந்தக் கோவிலில் தங்கி வந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதி ரதி, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் துணிகளைச் சலவை செய்வதற்காகத் திருச்செந்தூர் புறப்பட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணும் தானும் உடன் வருவதாகக் கூறி அவர்களுடன் வந்துள்ளார். திருச்செந்தூர் வந்ததும், கோவில் வளாகத்தில் வடக்கு டோல்கேட் அருகே உள்ள குளியலறைக்குத் துணிகளை சலவை செய்ய ரதி சென்றுவிட்டார். அந்த பெண், குழந்தையைத் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறியதால், ரதியின் கணவர் முத்துராஜ் சோப்பு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு, குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு வருவதாகக் கூறி அந்தப் பெண், குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வராததால் முத்துராஜும், ரதியும் கோவில் வளாகத்தில் தங்களது குழந்தையைத் தேடி வந்துள்ளனர். குழந்தை கிடைக்காததால், முத்துராஜ் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன் பிறகு, காவல்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பெண் குழந்தையைத் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைத்து குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தநிலையில், இந்த விவகாரத்தில் திலகவதி மற்றும் அவரது கணவர் பாண்டியனையும் கடந்த 8ம் தேதி கோவையில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட திலகவதி மற்றும் அவரது கணவர் பாண்டியன் ஆகிய இருவரையும் கோவை ஆலந்துறை காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வந்தனர். அப்போது திலகவதி சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் காவல்துறையினரிடம் கேட்டுள்ளார். பிறகு அவர் கழிவறைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் திலகவதி திரும்ப வராததால் போலீஸார் கழிவறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர் மயங்கிய நிலையில் கீழ் விழுந்திருந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவரை மீட்ட போலீஸார், அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்ததாக போலீஸார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து பாண்டியனிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாண்டியன், கடத்தப்பட்ட குழந்தை தனது சொந்த ஊரான சேலத்தில், தனது பெற்றோரிடம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். அவரின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து தூத்துக்குடி தனிப்படை காவல்துறையினர் சேலம் விரைந்து அங்கு பாண்டியனின் பெற்றோரிடம் இருந்த குழந்தையை மீட்டனர். பிறகு குழந்தை திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு குழந்தையின் பெற்றோரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். அங்கு மீட்கப்பட்ட குழந்தையை போலீஸார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT