ADVERTISEMENT

செரியலூர் இனாம் கிராமத்தில் புயலுக்கு சாய்ந்த தென்னை மரங்களை பொக்லைன் உதவியுடன் மீண்டும் நடும் விவசாயிகள்...

08:44 PM Dec 11, 2018 | bagathsingh


ADVERTISEMENT

கீரமங்கலம், டிச, 12.
செரியலூர் இனாம் கிராமத்தில் கஜா புயலுக்கு சாய்ந்த கிடந்த தென்னை மரங்களை பொக்லைன் உதவியுடன் மீண்டும் நடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT



வேரோடு சாய்ந்த தென்னை மரங்கள்

கஜா புயல் தாக்கத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டிணம் ஆகிய மாவட்டங்களில் தென்னை, தேக்கு, பலா மரங்கள் ஒடிந்து சாய்ந்தது. ஒவ்வொரு தோட்டத்திலும் தென்னை மரங்கள் வேரோடும் சாய்ந்தது. கோடிக்கணக்காண தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்யலாம் என்றும் மறுநடவு செய்தால் ஒரு வருடத்தில் மீண்டும் காய்ப்பு தொடங்கும் என்றும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியது. சுமார் 20 நாட்கள் வரை வேதனையில் இருந்து விடுபடாத விவசாயிகள் தென்னை மரங்களை வெட்டி அகற்றுவது பற்றிய சிந்தனையில் உள்ளனர். இந்த நிலையில் தான் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மறுபடியும் நடும் முயற்சியிலும் ஒரு சில விவசாயிகள் இறங்கியுள்ளனர்.



தென்னை மரங்கள் மறுநடவு:


இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மறுநடவு செய்ய விவசாயி துரை முயற்சி செய்து அதற்காக ஆழ குழி தோண்டவும், மரங்களை தூக்கி குழியில் நடவு செய்யவும் பொக்லைன் வாடகைக்கு எடுத்ததுடன் அதற்காக இளைஞர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு தனது தோட்டத்தில் சாய்ந்து வேரோடு கிடந்த தென்னை மரங்களை ஆழக்குழியில் மருந்துகள் தெளித்து மறு நடவு செய்தார்.




தென்னை மரங்களை மறுநடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள செரியலூர் ஆறுமுகம் மற்றும் இளைஞர்கள் கூறும் போது... வேரோடு சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் நடலாம் என்பதை அறிந்த பிறகு பொக்லைன் உதவியுடன் 6 முதல் 10 அடி வரை குழி வெட்டி சாய்ந்து கிடக்கும் தென்னை மரத்தில் காயம் ஏற்படாமல் கயிறுகட்டி நிமிர்த்தி குழிக்குள் நுண்ணூட்ட மருந்துகளை தெளித்து மரத்தை நட்டு வருகிறோம். இதுவரை ஆயிரம் மரங்களுக்கு மேல் மறுநடவு செய்திருக்கிறோம். இதனால் விவசாயிகள் மீண்டும் தென்னங்கன்று நட்டுவிட்டு 5 வருடம் காத்திருக்காமல் அடுத்த ஆண்டே தேங்காயை பார்க்க முடியும் என்று நம்புகிறோம். இதற்காக பொக்கலின் வாடகையும் துணைக்கு நிற்கும் இளைஞர்களுக்கு ஒரு நாள் சம்பளமும் மட்டுமே விவசாயிகளிடம் வாங்குகிறோம். இதை பேரிழப்பில் இருக்கும் விவசாயிகளுக்கு செய்யும் சமூகப்பணியாகவே நினைக்கிறோம் என்றனர்.


இதே போல வேரோடு சாய்ந்த தேக்கு, குமிழ், போன்ற மரங்களும் மறுநடவு பணிகளை செரியலூர் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT