ADVERTISEMENT

“கவிஞர் தாமரை தந்துள்ள விளக்கம் அவரது அறியாமையைக் காட்டுகிறது” - ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம்

03:54 PM Jan 24, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திரைப்பட பாடலாசிரியர் தாமரை தனது ட்விட்டர் பதிவில், “ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும். அது வீர விளையாட்டு அல்ல, அது ஒரு வன்கொடுமை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வீர விளையாட்டாக இருந்திருக்கலாம், காலத்தொடர்ச்சியில் அது மரபாக மாறி விட்டிருக்கலாம். ஆனால், பலவகையான மரபுகள் குறித்து காலத்துக்குக்காலம் சிந்தனைகள் மாறி வருகின்றன என்பதை மறந்து விடலாகாது. மாட்டை சாய்த்து வீரப்பட்டம் வாங்குவது கேவலம்” எனப் பதிவிட்டு இருந்தார்.

கவிஞர் தாமரையின் இந்த கருத்து தமிழக மக்களிடையே கடும் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது. இது தொடர்பாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில இளைஞரணி தலைவர் ராஜேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கவிஞர் தாமரைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார். அதில் அவர், "கவிஞர் தாமரை திரைப்பட பாடல் எழுதுவதுடன் தனது கருத்தை நிறுத்திக் கொள்ளட்டும். தமிழனின் மரபுகளை மறக்கடிக்க, அவர் வேறு கூட்டத்தோடு சேர்ந்து சதி செய்கிறார் என்று தோன்றுகிறது. எது வன்முறை என்பதற்கு அவர் தந்துள்ள விளக்கம் அவரது அறியாமையைக் காட்டுகிறது. மாடு வாய்திறந்து பேசுமா, தன் வலியை சொல்ல முடியுமா என்கிறார். கவிஞருக்கு மாடு பேசாது என்பது இப்போதுதான் தெரிகிறதா?

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள் யாரும் அதிகபட்சமாக 80 கிலோவுக்கு மேல் இருக்க வாய்ப்பு இல்லை. அப்படியே ஒரு கட்டத்தில் 2 அல்லது 3 பேர் பிடித்தாலும், உடனடியாக அதை தடை செய்து விடுகிறார்கள். ஒருவர்தான் பிடிக்க வேண்டும் என்பது போட்டியின் விதி. டன் கணக்கில் எடையை சுமந்து செல்லும் காளையை 80 கிலோ எடை கொண்ட வீரன் அடக்குவது எந்த விதத்திலும் கொடுமையோ வன்முறையோ ஆகாது. நீங்கள் பால், மோர், தயிர், டீ, காபி சாப்பிடும் பழக்கம் உள்ளவராகத் தான் இருப்பீர்கள். பால் கறக்கும்போது பசு வலிக்கிறது என்று எப்போதாவது கூறியிருக்கிறதா? இல்லை, அதனிடம் கேட்டுவிட்டுத்தான் பால் கறக்கிறோமோ? உங்களின் கருத்து தமிழர்களின் மரபு, வீரம், பாரம்பரியத்துக்கு எதிரானது மட்டுமல்ல. தமிழர்களுக்கு எதிரான கும்பலிடம் நீங்கள் சேர்ந்து சதி செய்கிறீர்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

தமிழகத்தில் இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க இருக்கிறது. பல இடங்களில் சிறப்பாக முடிந்து விட்டது. எனவே, தமிழன் அமைதிப்புரட்சி; மெரினா புரட்சி நடத்தி பெற்ற உரிமையைப் பறிக்க நினைக்கும் உங்களின் கொடும்பாவியை கொளுத்தி எங்களின் எதிர்ப்பைக் காட்ட முடிவு செய்துள்ளோம். இதோடு உங்கள் விஷ(ம)த்தனமான கருத்தை மூட்டை கட்டி விடுங்கள் என்று தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT