ADVERTISEMENT

கருவேல மரத்திற்கும் காப்பீடு..! கல்லா கட்டிய அதிகாரிகள்..!!!!

02:53 PM Oct 01, 2018 | nagendran




பயிர் சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன், பயிரே சாகுபடி செய்யாமல் அதிகாரிகள் துணையுடன் கருவேல மரத்திற்கும் இழப்பீட்டுத்தொகையைப் பெற்றுள்ளனர் விவசாயிகள். இவ்விவகாரம் மாவட்ட ஆட்சியர் வரைக்கும் செல்ல கிடுகிடுத்துள்ளது மாவட்ட வருவாய் வட்டாரம்.

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் பயிர் சாகுபடி செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.120 கோடி ரூபாய் வரை இழப்பீட்டுத் தொகை வழங்கியதாக அரசாங்கம் புள்ளி விவரம் சொல்கிறது. விவசாயிகள் பயிர் காப்பீட்டு பிரிமியமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.345, சோளம்- ரூ.123, கம்பு -ரூ.105, மக்காச் சோளம் - ரூ.200-ம் பாசிபயறு-ரூ.195, உளுந்து -ரூ.195-ம், சூரிய காந்தி-ரூ.132-ம், பருத்தி -ரூ.715 மிளகாய் - ரூ.915-ம், கரும்பு -ரூ.653-ம், எள் - ரூ.86 நிலக்கடலை- ரூ.218-ம், வெங்காயம் ரூ.819, வாழை ரூ.2,520 காப்பீட்டு பிரீமியமாக செலுத்துதல் வேண்டும்.

ADVERTISEMENT

இந்நிலையில், விவசாயம் பொய்த்துப் போக, மக்காச்சோளம் சாகுபடி செய்து, பாதிக்கப்பட்டதாக 18,714 விவசாயிகளுக்கு ரூ.63.47 கோடி இன்ஸ்யூரன்ஸ் தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் மிளகாய் சாகுபடி செய்து பாதிக்கப்பட்டதாக 8 ஆயிரத்து 494 விவசாயிகளுக்கு ரூ.32.60 கோடி காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. பாசிபயறு சாகுபடிக்கு ரூ.20.73 கோடியும், நெல் பயிருக்கு ரூ.3.92 கோடியும் இதர பயிர்களான உளுந்து, எள், வெங்காயம் போன்ற பயிர்களுக்கும் என மொத்தம் ரூ.120 கோடி காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் பாதிக்கும் மேல் உள்ள பயனாளிகள் விவசாயமே, செய்யாமல் அதிகாரிகள் துணையோடு காப்பீட்டுத் தொகையை பெற்றுள்ளனர். சும்மா வருகிற பணத்தை ஏன் விடவேண்டும் என அதிகாரிகளின் முறைகேட்டுக்கு விவசாயிகளும் கூட்டு சேர்ந்துள்ளனர்.

விளாத்திகுளம் வட்டம் ஆற்றாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கலிங்கபுரத்தில், “பயிர் சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை விட, காட்டை மராமத்து செய்யாமல் கருவேலம் மரமாக போட்டு வைத்திருந்தவர்கள் தான் பயிர் காப்பீடு பட்டியலில் அதிகம் இடம் பெற்றுள்ளனர். இந்த மோசடிக்கு உள்ளூர் விஏஓ, தலையாரி எல்லாமே உடந்தையாக இருக்கிறார்கள்” என்று குமுறினார் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமர்.

இதேபோல், ஒட்டப்பிடாரம் வட்டம் புளியம்பட்டி குறுவட்டத்தில உள்ள அக்காநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டுடன்பட்டி கிராமத்தில் லீலா (த-பெ) மாரிமுத்து என்பவர் 3 ஏக்கர் நிலத்தில் உளுந்து சாகுபடி செய்து பாதிக்கப்பட்டதாக காப்பீட்டு தொகைக்கு சிபாரிசு செய்திருக்கிறார் கிராம நிர்வாக அலுவலர் செல்வி. இதுதொடர்பாக அரசல் புரசலா செய்தி வெளியே கசிந்த உடன், வருவாய் ஆய்வாளர் அன்னதாஸ் ஆய்வு செய்திருக்கிறார். அதற்கு முன்னதாகவே அந்த நிலத்தில் இருந்த வேலிக் கருவேல மரங்களை ஜேசிபி மூலம் அகற்றி தடயத்தை மறைத்திருக்கின்றனர். இதேபோல், எட்டையபுரம், புதூர், கயத்தார், கோவில்பட்டி என பல பகுதிகளிலும் நிலத்தை தரிசாக போட்டிருந்த விவசாயிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, அதிகாரிகள் லட்சக் கணக்கில் காசு பார்த்துள்ளனர். மக்காளச் சோளத்தில் காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ஏரியாவை பொறுத்து ரூ.8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் ஏராளமானோர் மக்காச் சோளமே விதைத்துள்ளனர். உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்களுக்கு ரூ.6000 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படுகிறது. மழை பெய்து பயிர் வளர்ந்தால், மகசூல் அல்லது காப்பீட்டு தொகை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருக்கின்றனர்.

இந்த காப்பீடு பற்றி விபரம் தெரிந்த ஒரு சிலர், "சாகுபடி செய்யாமல் கிடக்கும் பிறரது விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து, அதில் உழவு போட்டு மானாவாரி பயிர்களை விதைத்துள்ளனர். காப்பீட்டு பிரீமியம் தொகை குறைவுதான். அதனால், விதைத்து வைப்போம் என்ற எப்படியும் போட்ட முதலை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு..!” விவகாரம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காதிற்கு எட்ட, வருவாய் துறை அதிகாரிகள் மத்தியில் பதட்டம் நிலவி வருகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT