சென்னையின் முதல் கட்டுமான அடையாளம், அன்றைய மவுண்ட் ரோடு, இன்றைய அண்ணா சாலை. இந்தச் சாலையில் 14 தளங்களுடன் இன்றும் பிரமிப்பாக பார்க்கப்படும் கட்டிடம் என்றால் அது எல்.ஐ.சி தான். எல்.ஐ.சியின்தலைமையிடம் மும்பையில் உள்ளது. 1956-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி இந்நிறுவனம் துவங்கப்பட்டு இன்றுடன் 62 ஆண்டுகள் முடிந்து, தனது 63-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதன் மொத்த சேவை தரத்தையும், அதன் பங்களிப்பும் மற்றும் அதன் வளர்ச்சியையும் பார்ப்பதற்கு முன்பாக, நமது சென்னை நகரத்தில் அதன் அடையாளமாகவும், அதன் மூலம் அண்ணா சாலை கொண்டுள்ள அழகையும் சற்று திரும்பி பார்ப்போம்.

LIC

Advertisment

அன்று முதல் இன்று வரை நாம் அண்ணார்ந்து பார்க்கும் எல்.ஐ.சி கட்டிடம் இருக்கும் இடத்தில்அதற்கு முன்பாக 'இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின்' நிறுவனரும் மற்றும் 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் நிறுவனுருமான 'எம்.சிடி.எம். சிதம்பரம்' தனது நிறுவன குழுவின் தலைமையிடமாக 18 தளங்களுடன் ஒரு கட்டிடத்தைக் கட்ட 1952-ல் எண்ணினார். பின் 1953-ல் அதற்கான கட்டுமான பணிகளை, லண்டனைச்சேர்ந்தகட்டட வடிவமைப்பாளர்களான (architect)'எச்.ஜே. பிரவுன்' மற்றும் 'எல்.சி. மௌலின்' (H.J.Brown & L.C.Moulin) ஆகியோரால்வேலைகள் தொடங்கப்பட்டது. கட்டுமான வேலைகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் 'எம்.சிடி.எம். சிதம்பரம்' சிங்கப்பூர் விமான விபத்தில் 13 மார்ச் 1954-ல் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து 1957-ல் கட்டுமான பணிகளில் இருந்து லண்டனை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர்கள் விடைபெற்றனர். அதற்குப்பின், முருகப்பா குழுமதைச்சேர்ந்தகோரமண்டல் இன்ஜினியரிங் நிறுவனம் மூலமாக சென்னை கட்டட வடிவமைப்பாளரான 'எல்.எம்.சிட்லே' (L.M.Chitale) அதன் பணிகளைமேற்கொண்டார். அதன் நடுவில் இந்திய அரசு 1956-ல் இன்சூரன்ஸ் சேவையை நாட்டுடமை ஆக்கியதன் தொடர்ச்சியாகஅந்த கட்டிடம் 1959-ஆம் ஆண்டு இந்திய அரசால் கையகப்படுத்தப்பட்டு, கட்டிமுடிக்கப்பட்டது. பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சரான மொரார்ஜி தேசாயால் திறக்கப்பட்டது. இதன் உயரம் 177 அடி. அன்றைய நிலவரப்படி இதன் கட்டுமான செலவு 8.7 மில்லியன் ரூபாய். இப்படி பல தடைகளைத் தாண்டி அத்தனை கோடிகளை செலவு செய்து கட்டப்பட்டு இருக்கும் அந்த கட்டிடம் என்றும் சென்னை கட்டிடங்களுக்கு ஒரு முன்னோடிதான். மேலும் முதல் முறையாக சென்னை வருபவர்களும், சென்னையிலே இருந்தும், முதல் முறையாக அண்ணா சாலை வழியாக பயணிப்பவர்களும் அந்தக் கட்டிடத்தை ஒரு நிமிடம் வியப்புடன்தான் பார்த்து செல்வார்கள்.

Advertisment

இப்படி ஒரு கட்டிடத்துக்குள் ஒரு வரலாற்றை மறைத்து வைத்துக்கொண்டு சென்னையில் நிற்கும் அந்த எல்.ஐ.சி.யின் 63-ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று. இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது இதன் முதலீடு ஐந்து கோடி ரூபாய். அதன் சொத்து மதிப்பு 352.20 கோடி, அதன் மொத்த கிளை அலுவலகங்கள் 168. அதே நிறுவனம் இன்று, 28.45 டிரில்லியன் சொத்து மதிப்புடன், 4,826 கிளை அலுவலகங்களுடன், 1.11லட்சம் பணியாளராகள் மற்றும் 11.48 லட்ச முகவர்களுடன். 14 நாடுகளில் தன் கிளை நிறுவங்களுடன் இயங்கி வருகிறது. மேலும் 2018 நிதியாண்டில் மட்டும் 8.12% தனது வியாபாரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் 69.40% சந்தையை கைப்பற்றியுள்ளது. இதற்கு போட்டியாக எச்.டி.எப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ. என பல நிறுவனங்கள் வந்தாலும், இன்றும் சந்தையிலும் மக்கள் மனதிலும், இன்சூரன்ஸ் என்று சொன்னதும் முதலில் வருவது, எல்.ஐ.சி.யாகதான் இருக்கும்.