ADVERTISEMENT

வேளாண் சட்டங்களின் விளைவுகளை கிராமசபைக் கூட்டத்தில் பேசிய கனிமொழி!

04:39 PM Oct 03, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


கரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி காந்தி ஜெயந்தியன்று நடக்கவிருந்த கிராம சபைக் கூட்டத்துக்கு தடை விதித்தது முதல்வர் எடப்பாடி அரசு. எளிய மக்களுக்கான ஜனநாயகம் என வர்ணிக்கப்படும் கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்தத்தை ஜனநாயக சக்திகளால் ஜீரணிக்க முடியவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில், எடப்பாடி அரசின் தடையை உடைத்து நேற்று தமிழகம் முழுவதும் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க. ஒவ்வொரு கூட்டத்திலும் தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசூர் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கலந்துகொண்டார்.

கனிமொழி கலந்துகொண்ட கூட்டத்தில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, ஒன்றியச் செயலாளர்கள் பாலமுருகன், ஜோஷப், ஊராட்சி மன்றத் தலைவர் தினேஷ் ராஜாசிங் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய கனிமொழி, கிராமசபைக் கூட்டத்தின் வலிமையையும், மக்களுக்கு இருக்கிற உரிமைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். சமீபத்தில் மோடி அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களின் விளைவுகளையும், அந்தச் சட்டங்களை தற்போதைய அ.தி.மு.க அரசு ஆதரித்திருப்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார் கனிமொழி.

இதனையடுத்து, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டியன்பட்டினம் கடற்பகுதியில் உருவாகியிருக்கும் மணல் திட்டுகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன், கரோனாவால் வாழ்வாதாராம் இழந்து தவிக்கும் மக்களுக்குத் தேவையான அத்யாவசியப் பொருட்களையும் வழங்கினார் கனிமொழி.

இதற்கிடையே கடந்த 30ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செயத கனிமொழி, திருச்செந்தூர் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஃபேவர் ப்ளக்ஸ் பதிக்கும் திட்டத்தை தொகுதிக்குட்பட்ட புன்னைக்காயல் பகுதியில் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, சொக்கன்குடியிருப்பு கிராமத்தில் நிலத்தகராறு தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்ட செல்வன் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, என்ன நடந்தது என்பதை கனிமொழியிடம் சொல்லி கதறியிருக்கிறார்கள் செல்வனின் குடும்பத்தினர். அவர்களுக்கு ஆறுதல் சொன்ன கனிமொழி, உங்களுக்கு தி.மு.க துணை நிற்கும் என உறுதியளித்திருக்கிறார். இதனையடுத்து, காயல்பட்டினம் பகுதியில், காயல் வெட்டரன்ஸ் கோப்பைக்கான கால்பந்தாட்டம் தொடரின் இறுதிப் போட்டியை துவக்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார் கனிமொழி. தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழியின் இந்தச் சுற்றுப்பயண நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கிறார் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT