ADVERTISEMENT

கனல் கண்ணன் மீண்டும் கைது

06:54 PM Jul 10, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனுடன் சில கருத்துகளையும் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், கனல் கண்ணன் கிறிஸ்துவ மதத்தை அவமதித்தாகக் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக வந்திருந்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கனல் கண்ணன் எஸ்.பி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அவரைத் தடுத்த காவல்துறையினர், விசாரணை முடியும் வரை எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

அப்போது, எஸ்.பி அலுவலகத்தின் வெளியே இருந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கனல் கண்ணன் தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், விசாரணை முடியும் முன் வெளியே செல்ல அனுமதி கிடையாது என கண்டிப்பு காட்டிய காவல்துறை, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT