ADVERTISEMENT

கல்வராயன் மலை கள்ளச்சாராய வீடியோ எதிரொலி - 900 லிட்டர் ஊறல் அழிப்பு

05:59 PM May 27, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன் மலையடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த வனப்பகுதி தான் கல்வராயன் மலைப்பகுதி. நீரோடைகளில் வரும் நீரை எடுத்து சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி மலையடிவாரத்திலேயே சட்ட விரோதமாக விற்பதாக தகவல் வெளியாகியது.

இது தொடர்பான வீடியோ காட்சியில் ''என்னப்பா பாக்கெட் சின்னதா இருக்கு 80 ரூபாய்க்கு கொடு'' என ஒருவர் கேட்க, “இப்போயெல்லாம் கிடைக்கிறதே பெருசு. 100 ரூபாய்தான். குறைக்க முடியாது'' என கள்ளச்சாராய பாக்கெட்டுக்கு பேரம் பேசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேட்டரி மூலப்பொருட்களை வைத்து சாராயம் காய்ச்சுவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது தொடர்பாக காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் கல்வராயன் மலைப்பகுதியை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களில் சென்னை வடக்கு மண்டல அமலாக்கப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் ஏழு குழுக்களாக தனிப்படைகள் அமைத்து நேற்று இரவிலிருந்து தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது வஞ்சிகுழி என்னும் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய 1500 கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டது. 150 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான உபகரணங்களும் இருந்தது. 900 லிட்டர் கள்ளச்சாராய ஊறலும் இருந்தது. இவை அனைத்தையும் அதே பகுதியில் கொட்டி அழித்த போலீசார், தங்கராசு என்பவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT