ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 31 கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா  பாதிப்பா? 

07:03 PM May 06, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 37 நபர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அசகளத்தூரை சேர்ந்த 11 பேரும் கோயம்பேட்டில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

ADVERTISEMENT


இந்த நிலையில் ஏற்கனவே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மற்றும் மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மலைக்கோட்டாலம் மேலூர் ஈயனூர் ஆகிய அரசு சுகாதார நிலையம், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வந்த வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. காரணம் மேற்படி சுகாதார நிலையங்களிலும், மருத்துவமனையிலும் மலைக்கோட்டாலம் நீலமங்கலம், வாணவரெட்டி, வீரசோழபுரம், மேலூர் தண்டலை, சிறுவத்தூர், அசகளத்தூர் இருந்தை, மாரனோடை, மதியனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண்கள் மேற்படி அரசு மருத்துவமனையிலும் சுகாதார நிலையங்களிலும் மருத்துவ சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களை அறிந்து கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இப்போது 30 கர்ப்பிணி பெண்களுக்கு கரோனா நோய் பரவியிருப்பதாக அதிகாரிகளுக்கு நோய் பரிசோதனை அறிக்கை வந்திருப்பதாக தகவல் வெளியானதையொட்டி, சுகாதார நிலையங்கள் மருத்துவமனை அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டன. மேலும் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள நிறைமதி கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 31 கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வளவு நிறைமாத கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது பற்றி அதிகாரிகள் தரப்பில் குழப்பமடைந்துள்ளனர். இதனால் பாதிப்பு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் மாவட்ட நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதோடு ஆட்சியர் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை மீண்டும் ஆய்வுசெய்யும்படி உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அரசு மருத்துவர்கள் சிலரிடம் கேட்டபோது, மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்யும் ஒரு செவிலியருக்கு கரோனாநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அந்த செவிலியர் மூலம் அங்கு சிகிச்சைக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு நோய் பரவி இருக்கலாம் அல்லது அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டர் மூலம் இந்த நோய் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது அல்லது முண்டியம்பாக்கம் மருத்துவ ஆய்வகத்தில் ஏதாவது குளறுபடி நடந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. ஏற்கனவே டெல்லியை சேர்ந்த நிதின்சர்மா என்பவருக்கு நோய் பாதிப்பு இல்லை என்று மருத்துவமனையிலிருந்து வெளியே அனுப்பிவிட்டு, பிறகு அவருக்கு நோய் இருப்பதாக கூறி அவரை தேடிக் கண்டுபிடிப்பதற்கு போலீஸ் துணை தேவைப்பட்டது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனைகளில் ஏதாவது தவறு நடக்க வாய்ப்பு உண்டு. எனவேதான் இது பற்றி சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். மேற்படி நிறைமாத கர்ப்பிணி பெண்களுக்கு வெளித் தொடர்பு இல்லாத நிலையில் நிறைய பெண்களுக்கு நோய் தொற்று பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்ற விவரங்கள் மர்மமாக உள்ளன.

பொது மக்கள் மத்தியில் இது பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 21 பேர் நோய் தொற்று சிகிச்சையில் இருந்து வந்தனர். நேற்று மட்டும் 79 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டதையடுத்து மொத்த எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. அமைதியான மாவட்டம் அதிக பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்துவந்த கள்ளக்குறிச்சி இப்போது 100-ஐ கடந்துள்ளதை கண்டு மாவட்ட மக்கள் திக்.. திக்.. மனநிலையில் உள்ளனர்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் தமிழக மக்கள் மத்திய மாநில அரசுகளின் 144 தடை உத்தரவுகளை பெரும்பாலும் கடைபிடித்து வருகிறார்கள். தமிழகத்தில் தினசரி 30 முதல் 50 பேர் வரை மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்து வந்தனர். பிறகு தினசரி 100, 200 என உயர்ந்தது. இப்போது தினசரி 500 கடந்து போய்க்கொண்டிருக்கிறது நோய் பரவல் எண்ணிக்கை. இந்த நிலையில் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்தவர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றதன் மூலம் நோய் தீவிரமாக பரவி வருகிறது .

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT