ADVERTISEMENT

கலாஷேத்ரா விவகாரம்; ஹரிபத்மன் மனைவி திவ்யா புகார் மனு

09:49 PM Apr 05, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

கலாஷேத்ரா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரிபத்மனின் மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 31ஆம் தேதி இந்தப் புகார் குறித்து கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தியது. அதன்பின் மாணவிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.

கலாஷேத்ரா கல்லூரியில் 2019 ஆம் ஆண்டு படித்த கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட மாணவிகளுடன் நேரடியாக விசாரணை நடத்தி புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்தனர். தொடர்ந்து மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் ஹரிபத்மன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில், கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரிபத்மன் சென்னை திரும்பியதும் வழக்கு விசாரணைக்காக போலீஸில் ஆஜராவேன் என்று தெரிவித்திருந்தார். ஐதராபாத்துக்கு கலாச்சார நிகழ்ச்சிக்காக சென்றிருந்த குழுவினர் சென்னை திரும்பினர். ஆனால், அவர்களுடன் ஹரிபத்மன் சென்னை வராமல் தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தலைமறைவான ஹரிபத்மனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் கைது அதிரடியாக கைது செய்தனர்.

ஹரிபத்மன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி உதவி பேராசிரியர் ஹரிபத்மனை ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், கலாஷேத்ரா விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஹரிபத்மனின் மனைவி திவ்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஹரிபத்மன் மீது புகார் தெரிவித்த மாணவிக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளார். அப்புகார் மனுவில், கலாஷேத்ராவில் பேராசிரியர்களாக பணிபுரியும் நிர்மலா மற்றும் நந்தினி என இரண்டு பேராசிரியர்களின் தூண்டுதலால் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளதாக ஹரிபத்மனின் மனைவி கூறியுள்ளார். ஹரிபத்மன் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கென குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT