ADVERTISEMENT

“மனைவியைக் கண்டுபிடித்து கொடுங்கய்யா..” காவல் நிலையத்தில் காத்துக்கிடக்கும் கணவன்

10:44 AM Jul 26, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT


"மனைவிய சந்தோஷமா வச்சிக்கணும்னு நினைச்சி வெளிநாட்டில் அரைவயிறும், கால்வயிறும் சாப்பிட்டு மிச்சப்படுத்தி பணமும் நகையுமா அனுப்பிவச்சேன். எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு என்ன நடைபிணமாக்கிட்டுப் போயிட்டாளே" என காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்து தரக் கோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு கண்ணீர்விட்டு கதறிக்கொண்டிருக்கிறார் அப்பாவி கணவன்.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு அடுத்துள்ள அச்சக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கலைமணி. தாய், தந்தையர் இல்லாத ஆதரவற்ற நிலையில் இருந்த கலைமணி, வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மனோகர் என்பவரது மகளான நிரோஜாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். சொந்த கிராமத்தில் போதுமான வேலை இல்லாமல் போனதால் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, மனைவியிடம் கூறியிருக்கிறார். மனைவி நிரோஜாவும், ‘பத்திரமா போய்வாங்க, வேளாவேளைக்குச் சாப்பிடுங்க, என்னப் பத்தி கவலைப்படாதீங்க, உன் நினைவோடு நீ வரும்வரை இருப்பேன். பத்திரமா போய்வாங்க’ எனக் கூறி அனுப்பியிருக்கிறார். வேலை முடிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய கலைமணி, தனது மனைவியோடு வசித்துவந்துள்ளார்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவு நேரத்தில் சிறுநீர் கழிக்க எழுந்த கலைமணி அதிர்ச்சியில் உறைந்துபோனார். பக்கத்தில் படுத்திருந்த மனைவி நிரோஜாவை காணவில்லை. எங்கே சென்றிருப்பார் என வீட்டில் உள்ள எல்லா இடத்திலும் தேடியுள்ளார். ஆனால், மனைவியைக் காணவில்லை. இதனால், அவர் அதிர்ச்சியடைந்தார். விடிய விடிய தேடியும் எந்தவிதத் தகவலும் அவருக்கு கிடைத்திடவில்லை. வேறு வழியில்லாத நிலையில், அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கீழையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

அந்த புகாரில், "5 பவுன் நகை, 3 லட்சம் பணத்தோடு எனது மனைவி நிரோஜா காணவில்லை. அவரை எனக்கு கண்டுபிடித்துத் தர வேண்டும்” என கூறியிருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட கீழையூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், நிரோஜா பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவரோடு சென்றிருப்பதாக தெரியவந்துள்ளது. "தாயோ, தந்தையோ, மற்ற உறவுகளோ இல்லாத கலைமணி மனைவியை எல்லா உறவுகளுமாக நினைத்து சம்பாதித்தார். ஆனால் அவர் நம்பிய மனைவியோ, அவர் தலையில் இடியை இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார். ஆனாலும் ‘என் மனைவியை எனக்கு மீட்டுத் தாருங்கள்’ என கண்ணீரோடு காவல் நிலையத்தில் அன்னம் தண்ணி இல்லாமல் பைத்தியமாக காத்துக்கிடக்கிறார்" என்கிறார்கள் அந்தக் கிராமத்து மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT