ADVERTISEMENT

‘கலைஞர் உலகம் அருங்காட்சியகம்’ - மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு!

05:15 PM Mar 04, 2024 | prabukumar@nak…

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தி.மு.க. முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அவரது உடல் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி கலைஞருக்கு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதனையடுத்து அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி (26.02.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். அதன் பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் கலைஞர் நினைவிடத்தின் நிலவறையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை நாளை மறுநாள் (06-03-2024) முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது எனவும் இணையதளம் மூலம் அதற்கான அனுமதிச் சீட்டு பெற்றுப் பார்வையிடலாம் எனத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன் கலைஞரின் கலை, இலக்கிய, அரசியல் வாழ்க்கை வரலாற்றினைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், அந்நினைவிட வளாகத்தில் நிலவறையில் நவீன தொழில்நுட்பங்களுடன் பல்வேறு அரங்கங்களுடன் ‘கலைஞர் உலகம்’ என்னும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில், கலைஞரின் நிழலோவியங்கள், உரிமை வீரர் கலைஞர், கலைஞருடன் ஒரு புகைப்படம், புதிரை வெல் கலைஞர் வழிசெல், அரசியல் கலை அறிஞர் கலைஞர், கலைஞருடன் ஒரு நேர்காணல், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி, பண்பாட்டுப் பேழை, கலைஞரின் வரலாற்றுச் சுவடுகள், கலைஞரின் மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள், சரித்திர நாயகனின் சாதனைப் பயணம் போன்ற அரங்கங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் கலைஞர் உலக அருங்காட்சியகத்தினைப் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு 06-03-2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும். இதனைப் பார்வையிடுவதற்குத் தமிழ்நாடு அரசின் https://www.kalaignarulagam.org/ என்ற இணைய முகவரி (Webportal) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய முகவரியில் பொதுமக்கள் பதிவு செய்து அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். கலைஞர் உலகத்திற்கான அனுமதிச் சீட்டு பெறுவதற்குக் கட்டணம் ஏதுமில்லை. முற்றிலும் இலவசமாக கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். ஒருவர் ஒரு அலைப்பேசி எண்ணின் மூலம் அதிகபட்சமாக 5 அனுமதிச் சீட்டுகள் வரை பெற்றுக் கொள்ள இயலும். இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதிச் சீட்டுடன் வருபவர்களுக்கு நிலவறையிலுள்ள கலைஞர் உலகத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

மேலும், ஒவ்வொரு நாளும் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 காட்சிகளாக நடைபெறும். பொதுமக்கள் தங்களுக்கு வசதியான காட்சி நேரத்தைத் தேர்வுசெய்து முன்கூட்டியே அனுமதிச் சீட்டினைப் பெற்றுக் கொள்ளலாம். அக்காட்சியினைக் காண வரும் பொதுமக்கள், காட்சி நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிய வேண்டும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தை பார்வையிட ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆகும். முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிச் சீட்டு ஏதும் தேவையில்லை.

நவீன தமிழ்நாட்டின் சிற்பி, தமிழ்த்தாயின் தவப்புதல்வன், ஓய்வில்லாமல் தமிழ் மக்களுக்காக உழைத்த கலைஞரின் பெருமையினைப் பறைசாற்றும் வகையில், நவீன மற்றும் புதுமையான பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள கலைஞர் உலகத்தினைப் பொதுமக்கள் தமிழ்நாடு அரசிற்கும், அங்குப் பணிபுரியும் ஊழியர்களுக்கும் ஒத்துழைப்பினை நல்கி கண்டுகளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT