ADVERTISEMENT

தானே மற்றும் வர்தா புயலைப்போல் இருக்குமா கஜா புயல்...? வெதர்மேனின் அப்டேட்

12:45 PM Nov 13, 2018 | tarivazhagan

தமிழகத்தை அச்சுருத்திவரும் ’கஜா’ புயல் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 800 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயல் கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதுகுறித்து அவரின் ஃபேஸ்புக் பதிவில், கஜா புயல் தென்மேற்கு திசையை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதே திசையில் நகர்ந்தால் 15-ம் தேதி காலை முதல் நண்பகலுக்குள் கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் கஜா புயலால் வட உள்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக்கூறப்பட்டது. ஆனால் புயலின் திசையைப் பார்க்கும்போது, தென்தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கஜா புயலால் சென்னையில் 14-ம் தேதி நள்ளிரவில் இருந்து மழையை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த வட தமிழக கடற்கரைப்பகுதிகளிலும் நவம்பர் 14-ம் தேதியிலிருந்து 16 வரை மழை பெய்யக்கூடும். கஜா புயல் சென்னையில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் காற்று பலமாக வீசுவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

நவ 14 முதல் 16 வரை சென்னையில் முன்பு கணித்ததைக் காட்டிலும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு. மேலும் சென்னையில் 150 மி.மீ வரை மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதே சமயம் அக்டோபர் 1-ம் தேதி சென்னையில் 200 மி.மீ மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் கரையைக் கடக்கும்போது மிக,மிக கனமழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தென்தமிழகத்தை பொறுத்தவரை உள்மாவட்டங்களிலும், மலைப்பகுதி மாவட்டங்களிலும் மற்றும் டெல்டா பகுதிகளில் மழை இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் மேற்கு, தென்மேற்காக நகர்வதால் வலிமையானதாக இருக்காது என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதனால் மணிக்கு 60 முதல் 80 கி.மீ வரையிலும், நிலத்தை அடையும்போது 90 முதல் 100 கி.மீ வரையிலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். சென்னையில் 120 கி.மீ வேகத்தில் காற்றுவீசிய வர்தா மற்றும் 140 கி மீ வேகத்தில் வீசி புரட்டிபோட்ட தானே புயல்களோடு ஒப்பிடும்போது கஜா புயல் காற்றின் வேகம் குறைவுதான் என்றும் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் அரபிக்கடலுக்குள் சென்றபின் வடகிழக்கு பருவமழை தூண்டப்பட்டுத் தீவிரமடையும் என்றும், உள்மாவட்டங்களில் 16-ம் தேதிவரை மழைபெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கஜா புயல் கரையை கடந்து சென்றபின் 19 மற்றும் 20-ம் தேதிகளில் வங்கக்கடலில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதனால் அடுத்துவரும் நாட்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். மீனவர்கள் 16-ம் தேதிவரை வங்கக்கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT