ADVERTISEMENT

கஜா புயல் - அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : சிபிஐ(எம்) வலியுறுத்தல்

04:23 PM Nov 14, 2018 | rajavel



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழு கூட்டம் நேற்றும் இன்றும் (2018 நவம்பர் 13,14) மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றறது.

இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில், கஜா புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு வரும் தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தொடர்ந்து அடிக்கடி புயல் வெள்ள பாதிப்புக்குள்ளாகி வரும் கடலூர் முதல் ராமேஸ்வரம் வரை இந்த முறையும் பாதிப்புக்குள்ளாகும் என வானிமை மையம் அறிவித்துள்ளது. இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர்கள் “அரசு தயார் நிலையில் உள்ளதாக” அறிவிப்புகள் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

ஆனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் பெருவெள்ளம ஏற்பட்டபோது மக்கள் தங்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர் என்பதிலிருந்து அமைச்சர்களின் அறிவிப்பு மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. நானோ புயல், ஒக்கி புயல், வர்தா புயல், 2015ல் ஏற்பட்டபெருவெள்ள பாதிப்பு ஆகியவை மக்கள் மனதில் இந்த அரசின் மீது மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பு புயல் வெள்ள சேதங்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட, வட்ட அளவில் அனைத்துக்கட்சி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த நடவடிக்கை கைவிடப்பட்டு விட்டது. இது வெறும் அதிகாரிகளை கொண்ட நிர்வாக ஏற்பாடாக மட்டும் நடைபெறுவதால் நிவாரண நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படுகிறது.

புயலும், கடும் மழையும் சேர்ந்து வரும் என்ற நிலையில் அதனால் எற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை கோருகிறது.

புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழுவினர் கடலூர் முதல் பாம்பன் வரை உள்ள அனைத்து பகுதிக்கும் உடனடியாக அனுப்பி வைத்திட வேண்டும். ஏற்படும் மின்துண்டிப்பினை உடனடியாக சரி செய்திட, தேவையான மின்மாற்றி, மின்கம்பங்களை அமைத்திட தமிழகத்தின் இதர மாவட்டங்களிலிருந்து தேவையான உபகரணங்களோடு மின் ஊழியர்களை இப்பகுதிக்கு அனுப்பிட வேண்டும். அதிக மழை பெய்யும்போது- நீர்நிலைகள் உடையும் ஆபத்து ஏற்படாமலும் அல்லது திடீரென்று அதிக நீரை திறந்து விட்டு வெள்ள சேதம் ஏற்படாமலும் உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் . புயலால் சாய்ந்து விடும் மரங்களை அப்புறப்படுத்தவும், வெள்ளத்தால் ஏற்படும் உடைப்புகளை சரி செய்யவும், ஆபத்தான பகுதியில் உள்ள மக்களை மீட்பதற்கும், மாநிலத்தின் இதர பகுதியிலிருந்து தீயணைப்பு - பேரிடர் மீட்பு குழுவினரை இப்பகுதிக்கு அனுப்பிட வேண்டும்.

அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அங்கெல்லாம் மக்களை தங்க வைப்பதற்கான சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்திடல், தங்க வைக்கப்படும் மக்களுக்கு மருத்துவம், சுத்தமான குடிநீர், உணவு ஏற்பாடுகள் செய்திட வேண்டும். பாதிக்கப்படும் அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கிட இப்பகுதியில் பொது மையங்களை ஏற்பாடு செய்து உணவு தயாரித்திட வேண்டும்.

தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு மக்களை மீட்கவும், தண்ணீர் வடியவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளை பாதுகாப்பாக வைக்க தனி முகாம்கள் ஏற்படுத்த வேண்டும். மீட்பு பணிகள் 24 மணி நேரமும் நடைபெறும் வகையில், அதிகாரிகள், ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உட்பட இயற்கையின் பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

இயற்கை பேரிடரை எதிர்கொள்ள தேவையான பேரிடர் மீட்பு குழு, விமானம், ஹெலிகாப்டர் போன்ற வசதிகளை அளிப்பதுடன் தேவையான நிதியினையும் மத்திய அரசு வழங்க முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT