ADVERTISEMENT

செம்மொழி தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகளை மூன்று ஆண்டுகளாக வழங்காதது ஏன்? கி.வீரமணி 

07:14 PM May 13, 2020 | rajavel



செம்மொழி தமிழுக்கான குடியரசு தலைவர் விருதுகளை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்காதது ஏன்? அதேபோல, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படவேண்டிய விருதையும் நிறுத்தி வைத்திருப்பது - தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே புறக்கணிப்பு என்ற நிலைதானே - மாநில அரசும் இதுகுறித்து கவனம் கொள்ளாதது ஏன்? என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 9 ஆம் தேதி விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழுக்கு இடம் இல்லையே, ஏன்?

இந்தியாவில் உள்ள பல மொழிகளை சேர்ந்த அறிஞர்களுக்கு கவுரவ சான்றிதழ், குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்படுவது தொடர்பான விளம்பரம் இது.

சமஸ்கிருதத்தில் தொடங்கி பல மொழிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதில் செம்மொழியான தமிழ் மட்டும் இடம்பெறவில்லை.


12.10.2004 இல் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை செம்மொழித் தமிழ் உயராய்வு மய்யத்தை மைசூரில் உள்ள இந்திய மொழிகளில் நடுவண் நிறுவனத்தில் தொடங்கியது. 2008 மே 19 அன்று செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தன்னாட்சி நிறுவனமாக சென்னையில் நிறுவப்பட்டது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடு யாது?

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமாக செயல்படுவதால், குடியரசுத் தலைவருக்கான விருது விளம்பரத்தை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமே அறிவிக்கும் என்று தோழர் இரவிக்குமார் எம்.பி., (விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர்) அவர்களுக்கு, இந்நிறுவனத்தின் இயக்குநர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு, நேற்று (12.5.2020) 2019-2020-க்கான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், செம்மொழித் தமிழுக்கு - 2016-2017, 2017-2018, 2018-2019 ஆகிய மூன்றாண்டுகளுக்கான குடியரசுத் தலைவரின் விருதுகளுக்கான விளம்பரம் வெளியிடப்பட்டு, குழு கூடி முடிவெடுக்கப்பட்ட பின்பும், இதுவரை அறிவிக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே 2019-2020 ஆம் ஆண்டுக்கு மற்ற மொழிகளுக்கான விளம்பரத்தையும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டு விட்டது.

கலைஞர் உருவாக்கிய அறக்கட்டளை சார்பில் வழங்கவேண்டிய விருது என்னாயிற்று?

அதேபோல, தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தம் சொந்த நிதியாக ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையினை அளித்தார் (24.7.2008).

கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு அறக்கட்டளை என்று அதற்குப் பெயரும் சூட்டப் பட்டது.

இந்தியாவிலேயே இது மிக உயரிய விருது என்று கருதப்படுகிறது. ரூபாய் 10 லட்சம் பரிசுத் தொகையும், அய்ம்பொன்னாலான திருவள்ளுவர் சிலையும், பாராட்டுச் சான்றிதழும், கலைஞர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும் - செம்மொழித் தமிழுக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுவதாகும்.


தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கியம், இலக்கியத் திறனாய்வு, மொழி பெயர்ப்பு, நுண்கலைகள் இவற்றில் பெரும் புலமை வாய்ந்த தனியொரு படைப்புக்கோ, தனித்தன்மை வாய்ந்த சிறப்புமிக்க பன்னாட்டு ஏற்புப் பெற்ற ஒருவரின் வாழ்நாள் பங்களிப்பிற்கோ இவ்விருது வழங்கப்படும்.

முதல் விருது கோவை செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டது

கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 அன்று இந்த விருது வழங்கப்படும் என்றும் வரையறுக்கப்பட்டது. முதல் விருது கோவையில் 2010 ஜூன் மாதம் நடத்தப் பெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது பேராசிரியர் அஸ்கோ பார்ப்போலோ என்னும் பின்லாந்து நாட்டுக்காரருக்கு வழங்கப்பட்டது.

அதற்குப் பிறகு 2010 ஆம் ஆண்டுமுதல் 2019 ஆம் ஆண்டுவரைக்கான விருதுகள் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஏனிந்த தாமதம் - முடக்கம்?

ஏனிந்த தாமதம்? தமிழ் செம்மொழிக்கான குடியரசுத் தலைவரின் விருதுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளிக்கப்படவில்லை. அதேபோல, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் ஒரு கோடி ரூபாய் தந்து உருவாக்கிய அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் விருதும் கடந்த 9 ஆண்டுகளாக அளிக்கப்படவில்லை.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே ஒரு புறக் கணிப்புதான் என்ற எண்ணத்தைத்தானே இது காட்டுகிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பெயர் அளவுக்குத்தானா?

சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் என்பது பெயரளவுக்குத்தான் நடைபெறுகிறது. மாதம் 12 லட்சம் ரூபாய் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறது. ஆனால், செயல்பாட்டைத்தான் காணோம்.

வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உடனடியாக நாம் சுட்டிக்காட்டிய தவறுகள் திருத்தப்பட்டு, தமிழ் மொழிக்கான முந்தைய ஆண்டு விருதுகளும், நடப்பாண்டிற்கான விருதுகளும், கலைஞரின் பெயரிலான விருதுகளும் அறிவிக்கப்பட்டு, விருது வழங்கும் விழா - மத்திய அரசால் நடத்தப்படவேண்டும்.


தமிழ்நாடு அரசுக்கு இதுபற்றிய கவலையும், பொறுப்பும் இருப்பதாகவும் தெரியவில்லை. செம்மொழிப் பிரச்சினையில்கூட வெறும் அரசியல் பார்வைதானா? அதனைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. இன்றைய அ.தி.மு.க. அரசு அதற்குரிய விலையை உரிய நேரத்தில் கொடுக்கவேண்டி இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT