ADVERTISEMENT

''பொது நிகழ்வுகளில் மதுவா?; சமுதாய சீரழிவு ஏற்படும்'' - ஜவாஹிருல்லா கருத்து

09:28 AM Apr 24, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'திருமண மண்டபங்கள் விளையாட்டு, மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம். மாவட்ட ஆட்சியரும், துணை ஆணையர்கள் இதற்கான அனுமதியை வழங்குவார்கள். பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது. இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு அனுமதிக்கு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்கு திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அதிருப்தி தெரிவித்துள்ளார். பொது நிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி தந்தால் அது சாலை விபத்துகளை அதிகரிக்கச் செய்யும். மதுபான விதி திருத்தத்தால் மோசமான சமுதாய சீரழிவு ஏற்படும். இதனால் உயிரிழப்புகளும், விபத்துகளும் அதிகரிக்கும். எனவே திருமணம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது விநியோகிக்க சிறப்பு அனுமதி தரும் ஆணையைத் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT