ADVERTISEMENT

சிறுத்தைப் புலி உயிரிழந்த விவகாரம்; ரவீந்திரநாத் எம்.பி. நேரில் ஆஜர்

12:01 AM Nov 13, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின் வேலியில் சிக்கி சிறுத்தைப் புலி உயிரிழந்த சம்பவத்தில் ஆடுகளுக்குக் கிடை போட்டிருந்தவர் கைது செய்யப்பட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கோம்பை வனப்பகுதியின் அருகில் அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டம் உள்ளது. செப்டம்பர் மாதம் 27ம் தேதி அந்த தோட்டத்தில் சிக்கிய இரண்டு வயது சிறுத்தைப் புலியை மீட்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டனர். வனப்பாதுகாப்பு அலுவலரைத் தாக்கிவிட்டுப் தப்பி ஓடிய அந்த சிறுத்தைப் புலி மீண்டும் மறுதினம் அந்த மின் வேலியில் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து அதே தோட்டத்தில் ஆடுகளுக்குத் தற்காலிகக் கிடை அமைத்திருந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கம், நில உரிமையாளரை விட்டுவிட்டு தற்காலிகக் கிடை அமைத்தவரைக் கைது செய்வதா எனக் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் வனத்துறை தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அப்பாவி மக்கள் மீது குற்றம் சுமத்துவதாகவும் தெரிவித்திருந்தது.

வேலியில் சிக்கியது இரண்டு சிறுத்தைப் புலிகள் என்றும் ஒன்று மீட்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மற்றொன்று தான் உயிரிழந்து விட்டதாக வனத்துறையின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையில் நேரில் ஆஜர் ஆகுமாறு வனத்துறை ரவீந்திரநாத்திற்கு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இன்று தேனி வனச்சரக அலுவலகத்தில் ரவீந்திரநாத் ஆஜர் ஆனார். அவரிடம் மூன்று மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வனத்துறையினரின் கேள்விக்கு விளக்கம் கொடுத்துள்ளேன். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் என் நிலையும் கூட” எனக் கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT