ADVERTISEMENT

ஸ்ரீ ரங்கத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு நடந்தது என்ன? - அறநிலையத்துறை விளக்கம்

05:40 PM Dec 12, 2023 | prabukumar@nak…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வழக்கம்போல் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 34 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர். இவர்கள் வரிசையை முந்திச் சென்று சாமி தரிசனம் செய்ய முற்பட்டுள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பிலிருந்த காவலர்களுக்கும், ஐயப்ப பக்தர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் சென்னா ராவ் என்ற ஐயப்ப பக்தருக்கு மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் அவர் அங்கேயே அமர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டார். இதனால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திருச்சி மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட ஐயப்ப பக்தர்கள் சென்னா ராவ் சார்பில் தாக்குதல் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதேபோன்று தன்னையும் ஐயப்ப பக்தர்கள் தாக்கியதாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த பரத் என்பவரும் புகார் கொடுத்தார். இரு தரப்பு புகார் மீதும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஆந்திராவைச் சேர்ந்த 34 பக்தர்கள் உண்டியலை மிகுந்த ஓசையுடன் அடித்தனர். அதோடு கோயில் பணியாளரையும் தாக்கியுள்ளனர். கோயில் பணியாளர் தலைமுடியைப் பிடித்து உண்டியலில் மோதச் செய்துள்ளனர். மற்ற பக்தர்களைத் தரிசனம் செய்யவிடாமல் இடையூறு செய்ததால் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT